சிக்கிமில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை..!
சிக்கிமில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக டீஸ்டா ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆற்றை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. ஆற்றை ஒட்டிய சாலைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளன. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
இந்த வெள்ளம் கேங்டாக், மங்கன், பாக்கியாங், நாம்சி ஆகிய 4 மாவட்டங்களில் புகுந்து கடும் சேதங்களை ஏற்படுத்தியது. மேலும், மாநிலத்தில் 14 பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதனால் போக்குவரத்து முடங்கி உள்ளது.
டீஸ்டா நதி வெள்ளம் பாய்ந்துள்ள பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறார்கள். சிக்கிமில் மேலும் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிக்கிம் மாநிலத்தில் வரும் 15-ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்படும் என அந்த மாநிலத்தின் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. எதிர்பாராத மழை மற்றும் வெள்ள பாதிப்புகள் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.