இன்று ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!
தமிழகத்தில் அரசு மற்றும் பொதுவிடுமுறைகளை தவிர்த்து உள்ளூர் பண்டிகைகள், திருவிழாக்கள் அடிப்படையில் உள்ளூர் விடுமுறைகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று டிசம்பர் 26ம் தேதி, செவ்வாய்க்கிழமை ராமநாதபுரம் மாவட்டத்தில் அருள்மிகு ஸ்ரீமங்களநாத சுவாமி திருக்கோவில் ஆருத்ரா தரிசன திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
டிசம்பர் 26ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் இயங்காது. எனினும், குறைந்த பணியாளர்களுடன் அரசு கருவூலங்கள் போன்ற முக்கிய அலுவலகங்கள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜனவரி 6ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் மார்கழி திருவிழாவின் முக்கிய நாளான தேர்த் திருவிழாவினை முன்னிட்டு இன்று டிச.26 (செவ்வாய்க்கிழமை) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலகங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என மாவட்ட ஆட்சியர் என்.ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக வரும் ஜன.20 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.