1. Home
  2. தமிழ்நாடு

சிவகங்கை அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 7ம் வகுப்பு மாணவன் பலி..!

1

சிவகங்கை மாவட்டம் வேம்பத்தூர் பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளி வாகனத்தில் இன்று மாணவர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது சருகனேந்தல் கண்மாய் அருகே பள்ளி வேன், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனை கண்டு அருகில் இருந்த கிராம மக்கள் பள்ளி குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த நிலையில் விபத்தில் உள்ளான குழந்தைகளில், முல்லைகுளம் கிராமத்தைச் சேர்ந்த 7ம் வகுப்பு மாணவன் ஹரி வேலன் என்பவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Sivaganga

இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயங்களுடன் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் பள்ளி வாகனத்தில் இருந்த ஆசிரியர் ஒருவரும் காயம் அடைந்துள்ளார். இந்த விபத்து குறித்து சிவகங்கை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சிவகங்கை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக சேரும் சகதியமாக காணப்பட்ட ஏரிக்கரை வழியாக பள்ளி வேன் சென்றபோது அந்த சேற்றில் சிக்கி வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில், இந்த விபத்துக்குள்ளானது பள்ளி வாகனமே இல்லை என்றும் அந்த வாகனம் சென்னையில் பதிவு செய்யப்பட்ட வாகனம் என்றும் சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். மேலும், இந்த விபத்து தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

Sivaganga

பள்ளியின் சார்பாக பயன்படுத்தப்படும் எந்தவொரு வாகனமும் போக்குவரத்துத் துறையின் சிறப்பு அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால், இந்த வேனை அனுமதி பெறாமல், பள்ளி மாணவர்களை ஏற்றுவதற்கு பள்ளி நிர்வாகத்தினர் பயன்படுத்தி வந்துள்ளனர்.

மேலும், வழக்கமான ஓட்டுநருக்கு பதிலாக, வேறு ஓட்டுநர் வாகனத்தை இயக்கியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவன் பலியாக காரணமான விபத்தில் சிக்கிய வாகனத்துக்கு பள்ளி நிர்வாகம் அனுமதி பெறாதது அம்பலமாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like