பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை.. சிக்கிய தற்கொலை கடிதம்..!

ஓசூர் அருகே கெலவரப்பள்ளி பகுதியில் இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையம் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த முகாமை சேர்ந்தவர் உதயகுமார். பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மூத்த மகள் திவ்ய பிரியா 17). இவர் ஓசூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ப்ளஸ்-2 படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாணவி திவ்ய பிரியா வீட்டில் உள்ள கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஓசூர் அட்கோ போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். ப்ளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை செய்து கொண்ட மாணவி வீட்டில் இருந்து அவர் எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
அந்த கடிதத்தில் மாணவர், பள்ளிக்கூடத்தில் வழங்கப்பட்ட மதிப்பெண் அட்டையில் பெற்றோருக்கு பதிலாக தானே கையெழுத்திட்டு கொண்டேன். இதனை கண்டுபிடித்த ஆசிரியர்கள் என்னை கண்டித்து பெற்றோரை அழைத்து வருமாறு கூறினர். மேலும் இதனை அறிந்து பெற்றோரும் என்னை கண்டித்தனர். இந்த வேதனையால் நான் வாழ பிடிக்காமல் தற்கொலை செய்து கொள்கிறேன் என உருக்கத்துடன் எழுதியிருந்தார்.