இனி பள்ளிகளில் வருடாந்திர சோஷியல் ஆடிட் நடத்தபட வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் சமீபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த சூழலில் அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், மாணவர்களின் மன நலனை உறுதி செய்யும் வகையில் வருடாந்திர சோஷியல் ஆடிட் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில், மாணவர்களுக்கு உடல் ரீதியிலான தண்டனைகள் வழங்கப்படுகிறதா? மன ரீதியில் பாதிப்பிற்கு ஆளாகிறார்களா? பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் நிகழ்வுகள் அரங்கேறுகிறதா? உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்க வேண்டும்.
இதுதொடர்பாக பேசிய தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன், மாணவர்களின் சோஷியல் ஆடிட் அறிக்கை மூலம் கல்வியாளர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கள நிலவரத்தை அறிந்து கொள்ள முடியும். குறிப்பிட்ட கால இடைவெளியில் நடவடிக்கைகள் எடுக்கலாம். இந்த அறிக்கையானது நடப்பு கல்வியாண்டின் இறுதிக்குள் முடிக்கப்படும். அடுத்த கல்வியாண்டு தொடங்குவதற்குள் வெளியிடப்படும்.
இதுதொடர்பான வழிகாட்டுதல்கள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்டறிய மேற்பார்வை குழுக்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் அமைக்க வேண்டும். இதில் தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர்கள், மூத்த மாணவர்கள் உள்ளிட்டோர் இடம்பெற வேண்டும். தேவைப்படும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் சேவைகள் அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
ஒட்டுமொத்தமாக பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நேர்மறையாக மாணவர்களிடம் அணுக வேண்டும். மாணவர்களின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அதை சரிசெய்யும் வழிகளை ஆராய வேண்டும். வருடாந்திர சோஷியல் ஆடிட் விஷயத்தில் ஆசிரியர்களுக்கு போதிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
இதற்கான பொறுப்பை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஏற்க வேண்டும். பெற்றோர்களுக்கு உரிய நேரத்தில் தகவல்கள் தெரிவிப்பது அவசியம். அவர்களை உள்ளடக்கி அவ்வப்போது ஆலோசனை கூட்டங்கள் நடத்த வேண்டும். இவை NCPCR வழிகாட்டுதல்களை பூர்த்தி செய்யும் வகையில் அமைய வேண்டும்.