1. Home
  2. தமிழ்நாடு

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்/ பெறாதவர்களுக்கு உதவித் தொகை அறிவிப்பு - உடனே விண்ணபிக்கவும்..!

1

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 01.07.2025 முதல் 30.09.2025 வரையிலான காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் (பொது) மற்றும் படித்த வேலைவாய்ப்பற்ற அனைத்துவகை மாற்றுத்திறனாளி இளைஞர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பத்தாம் வகுப்பு தோல்வி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி, பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் இளங்கலைப்பட்டப்படிப்பு முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, தற்போது வரை புதுப்பித்து 30.06.2025 அன்றைய நிலையில் ஐந்தாண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு, தமிழக அரசால் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளை பொறுத்தமட்டில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது.

பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம். B.Sc. Nursing போன்ற தொழிற்பட்டப் படிப்புகள் (PROFESSIONAL DEGREE) முடித்தவர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற இயலாது. அரசின் பிற துறைகளில் உதவித்தொகை பெற்றுவருபவர்கள் மற்றும் தனியார்துறையில் பணிபுரிபவர்கள் இத்திட்டதின் கீழ் உதவித்தொகை பெற இயலாது.

இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விருப்பமுள்ள மனுதாரர்கள் (பொதுப்பிரிவினர்) தங்கள் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இந்த உதவித் தொகையினைப் பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 30.06.2025 அன்றைய நிலையில் 45 வயதிற்குட்பட்டும், இதர இனத்தை சார்ந்தவர்கள் 40 வயதிற்குட்பட்டும் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு வயது வரம்பு மற்றும் ஆண்டு வருமானத்தில் வரம்பு எதுமில்லை.

அனைத்துவகை மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை விவரம் :

1. பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு - மாதம் ரூ.600/-
2. +2 வகுப்பில் தேர்ச்சி / அதற்கு சமமான தகுதி பெற்றவர்களுக்கு - மாதம் ரூ.750/-
3. பட்டதாரிகள் / முதுகலைப்பட்டதாரிகளுக்கு - மாதம் ரூ.1,000/-

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை விவரம்

1. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதாவர்கள் மாதம் ரூ.200/
2. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மாதம் ரூ.300/
3. +2 வகுப்பில் தேர்ச்சி / அதற்கு சமமான தகுதி பெற்றவர்களுக்கு - மாதம் ரூ.400/- 
4. பட்டதாரிகள் / முதுகலைப்பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600/-

உதவித்தொகை விண்ணப்பப் படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்களை ஆதாரமாக காண்பித்து, செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மனுதாரர்கள் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் சமர்ப்பிக்குமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். மற்ற மாவட்டத்தினர் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளவும்.

Trending News

Latest News

You May Like