1. Home
  2. தமிழ்நாடு

எங்கள் குலசாமி என்று சொல்லிக் கொண்டே, என் நெஞ்சில் குத்துகிறார்கள் - ராமதாஸ் உச்சகட்ட விரக்தி..!

Q

தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்,

எனக்கும், செயல் தலைவருக்கும் இடையே நிலவும் பிரச்னைகள் முழுதும் உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனால், போலீஸ்காரர்கள் தான் சொல்வார்கள், காத்து போகாத இடத்திற்கு கூட காவல்துறை செல்லும் என்று. அதே போல தான் ஊடகங்களும்.

சிறந்த ஆளுமைகள் உள்ள இரண்டு பேருடைய சமரச பேச்சுவார்த்தை டிராவில் முடிந்து விட்டது. ஒரு முடிவுக்கு வரவில்லை. இதற்கு முன்பு 14 பஞ்சாயத்துக்கள் நடந்தன. நான் தொடங்கிய 34 அமைப்புகளில் ஒன்றிரண்டு பேர் எனக்கு பஞ்சாயத்து பண்ண வந்தார்கள். அடடா, இதுதான் தலைவிதி என்பதோ என்று இதனை ஏற்றுக் கொண்டேன். அனைவரும் ஒரே மாதிரியான தீர்ப்பையே சொன்னார்கள்.

நான் இங்கே இருந்து கொண்டு கட்சியை வளர்ப்பது, அவர் மக்களை பார்ப்பது என்பது தான் அந்த தீர்ப்பு. யாருக்கு நேரம் சரியில்லையோ. அன்புமணிக்கு தலைவர் பதவியை விட்டுத்தர தயாராக இருப்பதாகக் கூறினேன். அதற்காக கவுரவ தலைவர், சமூக முன்னேற்ற சங்கத்தின் தலைவர் ஆகியோரை பார்த்து விட்டு வாருங்கள் என்று சொன்னேன். ஆனால், அன்புமணி நம்பவில்லை.

என்னுள் இருந்த இயற்கையான கோபம் பொங்கி எழுந்தது. நீயா? நானா? என்று பார்த்திடுவோம் என்ற முடிவுக்கு வந்து, இப்போது உங்களை சந்தித்து கொண்டிருக்கிறோம். ராமதாஸ் என்று ஒருத்தன் இருக்கானே, அவன் பெயரைத் தானே பின்னால் போட்டுக் கொண்டுள்ளோம். அவனுக்கு என்னதான் கொடுக்க வேண்டும். நிறுவனர் ராமதாஸா? அவருக்கு கேட்டை சாத்திக்கொண்டு, கொள்ளுப் பேரனுடன் விளையாடிக் கொண்டிருக்கட்டும் என்று சொல்கிறார்கள்.

என்னை பார்க்க வருபவர்களை சந்திப்பேன். நேற்று 300 பேரையும், நேற்று முன்தினம் 700 பேரையும் பார்த்தேன். 46 வருடங்களாக மக்களுடன் பழகி வருகிறேன். அவர்கள் என்னை உயிராக நினைக்கிறார்கள். என்னுடைய பாட்டாளி சொந்தங்களை உயிருக்கு மேலாக நினைக்கிறேன்.

என்னை குலதெய்வம் என்று சொல்கிறார்கள். நான் அதற்கு மேலே ஒருபடி சென்று, அவர்களை தொண்டர்களாக அல்லாமல், வழிகாட்டிகளாக பார்க்கிறேன். கட்டிக்காத்த கட்சி இது, இன்னும் ஓரிரு ஆண்டுகள் தலைமையேற்க எனக்கு உரிமையில்லையா?. இதனை கேட்பதே எனக்கு அவமானம். ஒவ்வொரு செங்கல்லாக பார்த்து பார்த்து கட்டிய பா.ம.க., என்ற மாளிகையில் நான் குடியமர்த்தியவரே, என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் அளவுக்கு செயல்பாடுகள் இருந்தன, இருக்கின்றன.

மாவட்ட செயலாளர்கள் வருகையை தடுத்து நிறுத்தி, அவரே (அன்புமணி) செல்போனில் பேசி, என்னை மானபங்கம் செய்துள்ளார். அன்று அமைதி காத்திருந்தால், அதிகாரம் தானாக அன்புமணிக்கு வந்து இருக்கும். ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களுக்கும் அதிகாலை 3 மணிக்கு எல்லாம் பேசி, போகாதே, போகாதே என்று கூறியுள்ளார். அப்படியும் மீறி 8 பேர் வந்தார்கள். ஒரு பொய்யான தகவலை சொல்லி, என்னை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்போகிறார் என்று சொல்லி போக வேண்டாம் என்று தடுத்து விட்டார்.

அந்த மாதிரியான நிகழ்வு நடக்காமல் இருந்தால், ஓரிரு ஆண்டுகளில் முடிசூட்டுவிழா நானே முன்னின்று நடத்தியிருப்பேன். 3 ஆண்டுகளுக்கு முன்பு முடிசூட்டு விழா நடந்தது. அப்போதுஆனந்த கண்ணீர் விட்டேன்.

தீர்வு காண்பதற்கு தாரக மந்திரம் என்னவென்றால், தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை. தந்தைக்குப் பிறகு தனயன். அய்யாவுக்குப் பிறகே அன்புமணி என்பது அனைவரும் சொல்லும் வார்த்தை. குருவுக்கு மிஞ்சிய சிஷ்யன் இருக்கலாம். ஆனால், தந்தைக்கு மிஞ்சிய தனயன் கூடாது. இதுவே, நீதி, நேர்மை, தர்மம்.

எனது மனக் குமுறல்கள். என்னை எங்கள் குலசாமி என்று சொல்லிக் கொண்டே, என் நெஞ்சில் குத்துகிறார்கள்.எங்களுக்கு எல்லாம் அய்யா தான் என்று சொல்லிக் கொண்டே, என்னை அதளபாதாளத்தில் தள்ளுகிறார்கள். அனைத்தும் அய்யா தான் என்று சொல்லிக் கொண்டே என்னை அவமானப்படுத்துகிறார்கள். அய்யாவின் பெருமையை பேசுவதே எங்களின் நோக்கம் என்று சொல்லிக் கொண்டே, என்னை சிறுமைப்படுத்துகின்றனர்.

அய்யாவின் லட்சியமே எங்கள் லட்சியம் என்று சொல்லிக் கொண்டே, என்னை இலக்காக தாக்குகின்றனர். இவையெல்லாம் நான் உருவாக்கி சமூக ஊடகப் பிரிவும், சமூக வலைதளங்களின் மூலம் எனக்கு எதிராக செய்கின்றனர். என் கைவிரல் கொண்டே என் கண்ணை குத்திக் கொண்டேன். உயிருள்ள என்னை எல்லா பக்கமும் என்னை உதாசீனப்படுத்திவிட்டு, உருவப்படத்தை மட்டும் வைத்து விட்டு, உ ற்சவம் செய்கின்றனர். என்னை நடைபிணமாக்கி விட்டு, நடைபயணம் செய்கிறார்கள். எல்லாமே நாடகம். அதில், ஒவ்வொருவரும் நடிகர்கள், இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like