சசிகலா விடுதலை குறித்து ஒரிரு நாளில் தெரியவரும்! ராஜா செந்தூர் பாண்டியன் தகவல் !

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் தோழி சசிகலா விடுதலை தொடர்பாக இன்னும் ஒரிரு நாட்களில் தெரியவரும் என்று அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் தோழியாக வலம் வந்தவர் சசிகலா. வருமானத்திற்கு மீறி சொத்து குவித்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதியில் அவர் குற்றவாளி என்றும், அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
இதனையடுத்து, கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். சசிகலா சிறையில் அடைக்கப்பட்டு 3 வருடம் 8 மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில், இன்னும் 3 மாத காலம் சிறையில் இருக்க வேண்டி இருக்கும் என கூறப்பட்டது.
ஆனால், நன்னடத்தை காரணமாக அவர் முன்கூட்டியே விடுதலையாவார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கூறுகையில், கர்நாடகா மாநிலத்தில் தசரா பண்டிகையை முன்னிட்டு இன்று வரை, அதாவது 27-ம் தேதி வரை நீதிமன்றம் விடுமுறை விடப்பட்டுள்ளது.
எனவே நாளை நீதிமன்றம் திறக்கப்பட உள்ளது. அப்போது, முக்கியத் தகவல் வரும் என எதிர்பார்க்கிறோம் என கூறியுள்ளார்.
இதன் மூலம் சசிகலா விடுதலை இன்னும் ஒரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக தெரிய வரும்.