சசிகலாவின் ரூ.2,000 கோடி சொத்துகள் முடக்கம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில், சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார் சசிகலா. சசிகலா, இளவரசி, சுதாகரனின் சிறை தண்டனை காலம் 2021 ஜனவரியில் முடிகிறது.
இந்நிலையில், சசிகலா உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் என சுமார் 187 இடங்களில் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற்ற இந்த சோதனையில், சசிகலாவின் உறவினர்கள் 60க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை தொடங்கி ரூ.1,500 கோடி வரை, வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பல்வேறு சொத்துகளில் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்திருப்பதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது. இந்த வருமான சோதனையைத் தொடர்ந்து அப்போது ரூ.1,600 கோடி மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியது.
வேதா இல்லம் இருக்கும் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு எதிரே இருக்கும் சுமார் 10 கிரவுண்டு இடம் சசிகலாவுக்கு சொந்தமானது என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், போயஸ் கார்டனில் உள்ள 10 கிரவுண்ட், தாம்பரம், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான 65 சொத்துகளையும் வருமான வரித்துறை முடக்கியிருந்தது.
தற்போது, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான ரூ.2,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறையினர் முடக்கி உள்ளனர்.