சசிகலாவுக்கு மன்னிப்பே கிடையாது.. ஓ.பி.எஸ் குட்டிக்கதைக்கு ஜெயகுமார் பதிலடி !!
அதிமுக கட்சிக்குள் எப்போதும் இருவிதமான புயல் சுழன்றுகொண்டே தான் இருக்கிறது. இந்த நிலையில், அதிமுக நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் கூறிய கதை, தற்போது அதிமுகவில் சசிகலாவுக்கான கதவு திறக்கப்பட்டுவிட்டதோ என்று தொண்டர்கள் நினைக்க தொடங்கியுள்ளனர்.
சென்னை சேத்துப்பட்டில் அதிமுக சார்பில் இன்று கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய ஓ.பன்னீர் செல்வம், 'தவறு செய்பவர்கள் மனம் திருந்தி வந்தால் அவர்களை ஏற்பதுதான் தலைமைக்கு அழகு,' எனத் தெரிவித்தார். இதனால் தான் அவர் சசிகலாவுக்கு அழைப்பு விடுத்தாரா என்ற பரபரப்பு எழுந்தது. இதனால் எடப்பாடி பன்னீர்செல்வம் தரப்பு அதிருப்தி அடைந்தது.
இந்த நிலையில், கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், மனித குலம் தோன்றியது முதல் தவறிழைத்தல் இயல்பு. ஆனால் திருந்தி வாழுவது மனித குலத்தின் சிறப்பு. ஆனால் திருந்தாத சசிகலாவிற்கு மன்னிப்பே கிடையாது என்பதில் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் உறுதியாகவே இருக்கிறார்கள் என தெரிவித்தார்.
சசிகலா இணைப்பு அர்த்தத்தில் ஓபிஎஸ் குட்டிக் கதை கூறவில்லை. சசிகலாவை சேர்க்க கூடாது என கட்சியினர் அனைவரும் ஒரே எண்ணத்தில் இருக்கிறோம். ஓபிஎஸ் கூறிய கதைக்கு கண் காது மூக்கு வைத்து உருவம் கொடுக்காதீர். அந்த கதை பாமரர்களுக்கே பொருந்தும், சசிகலாவுக்கு பொருந்தாது, என அதற்கு பதில் அளித்தார்.
newstm.in