பாஜகவில் இணைந்தது குறித்து சரத்குமார் வெளியிட்ட தன்னிலை விளக்க அறிக்கை..!
திமுக, அதிமுக கட்சிகளில் மாறி மாறி இணைந்து பின்பு அங்கிருந்து வெளியேறிய நடிகர் சரத்குமார் கடந்த 2007ஆம் ஆண்டு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை ஆரம்பித்தார். நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கும் நிலையில், தனது கட்சியை நேற்று பாஜவுடன் இணைத்தார். நாட்டுக்காக உழைக்கும் மோடியுடன் இணைந்தால் என்ன என்று தனக்கு நள்ளிரவில் தோன்றியதாகவும் இதனை தன் மனைவி ராதிகாவிடம் கேட்டு முடிவு செய்ததாகவும் கூறினார்.
சரத்குமாரை ’நாட்டாமை அண்ணன்’ என பாஜகவுக்கு வரவேற்ற அண்ணாமலையும் அவர் தேசிய அரசியலுக்குத் தேவை என்றார். இதனையடுத்து பலரும் பலவிதமாக இந்த இணைப்பைப் பற்றி சித்தரித்து வருவதால் தன்னிலை விளக்கமாக அறிக்கை ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சரத்குமார்.
அதில், ‘1996 ஆம் ஆண்டு அன்றைய ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அக்கட்சியை எதிர்த்து பிரச்சாரம் செய்ய முடிவு செய்ததே என் அரசியல் பயணத்தின் துவக்கம். திராவிட முன்னேற்றக் கழகத்தையும், அவர்களின் கூட்டணியான தமிழ் மாநில காங்கிரஸையும் ஆதரித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சி பீடத்தில் அமர்த்தியதன் பங்கு என்னையும், என்னைச் சார்ந்த ரசிக பெருமக்களையும், தமிழக மக்களையும் சாரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
பிறகு கலைஞர் அவர்களால் ஈர்க்கப்பட்டு, அழைக்கப்பட்டு முதன்முறையாக ஓர் அரசியல் கட்சியின் உறுப்பினர் ஆனேன். அங்கு நடந்த சில கசப்பான சம்பவங்களுக்கு பிறகு, அக்கட்சியில் இருந்து விலகி, மக்கள் பணியை தொடர்ந்து ஆற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் என்னை இணைத்துக் கொண்டேன். அங்கும் சிலரால் புரட்சித்தலைவி அவர்களின் கட்சியில் இருந்து விலகினேன்.
அதன் பிறகு 2007 – ஆகஸ்ட் 31 இல் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி உருவானது. 16 ஆண்டுகள் அரசியல் பயணம். ஜனநாயகம் குறைந்து, பணநாயகம் மேலோங்கிய அரசியலில் நாம் நினைத்த இலக்கை அடைய முடியவில்லையே என்ற என் சிந்தனைக்கு, இந்த பாராளுமன்றத் தேர்தல் ஓர் ஞானோதயமாக அமைந்தது. பதவி இருந்தால் தான் மக்கள் பணியாற்ற முடியும் என்பது உண்மை என்றாலும், கூட்டணி, கூட்டணி என்ற பேச்சுகளும், அதற்கு மட்டும் தான் நாம் பயணிக்கிறோமா என்ற எண்ணமும் என் அமைதியை இழக்கச் செய்தது.
என் பயணத்தில் நான் தோல்வி அடைந்துவிட்டேன் என்று பிறர் பலவிதமாக பேசினாலும், அதற்கெல்லாம் கவலைப்படாமல், நாம் மக்களுக்காக சேவை செய்ய நல்ல எண்ணத்தோடு செயல்படுகிறோம் என்பதை மனதில் தாங்கி, சக்திவாய்ந்த நாட்டின் வளர்ச்சியையும், நாட்டு மக்களின் நன்மையையும், இந்தியர்களின் பெருமையை உலகறியச் செய்யும் பாரத பிரதமர் மோடி அவர்களின் திறமையான ஆட்சிக்கு, மீண்டும் அப்பழுக்கற்ற பெருந்தலைவர் அவர்களின் ஆட்சி அமைப்பதற்கு பாரதிய ஜனதா கட்சியுடன் உறுதுணையாக இருந்து ஏன் செயல்படக்கூடாது என்று சிந்தித்தேன்.
அதனால் என் உழைப்பையும், என் இயக்கத்தின் சகோதரர்களின் உழைப்பையும் தமிழக மக்களுக்காகவும், தேசத்தின் ஒற்றுமைக்காகவும், தேசத்தின் வளர்ச்சிக்காகவும் அர்ப்பணித்திட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை, பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்து செயல்பட அனைவரின் ஆதரவுடன் முடிவெடுத்தேன்’ எனக் கூறியுள்ளார்.