உலகே கண்டு வியந்த ஒரு ஒப்பற்ற தலைவரை முடிந்த வரை இழிவு செய்து விட்டீர்கள் - சங்ககிரி ராஜ்குமார்!

பெரியாரைப் பற்றித் தொடர்ந்து பேசி வருவதால் எங்கள் தலைவர் பிரபாகரனோடு நான் எடுத்த படம் எடிட் செய்யப்பட்டது என்கிற அவதூறை பரப்பி வருகிறார்கள்.
இப்போது எடிட் செய்து கொடுத்ததாகச் சொல்லும் நபர் இவ்வளவு நாட்களும் என்ன செய்து கொண்டு இருந்தார் என்று தெரிவித்தார்.
இதனையடுத்து ஆதாரத்துக்கு ஒரு ஆதாரம் தேவையா எனச் சீமானுக்கு இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கேள்வி எழுப்பி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இதனையடுத்து நாம் தமிழர் தொண்டர்கள் தன்னை மிரட்டுவதாக எக்ஸ் தளத்தில் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் கூறியிருப்பது,
அண்ணனின் தம்பிகளுக்கு வணக்கம். கடந்த நான்கு ஐந்து நாட்களாக என் அலைபேசிக்கு நேரடியாகவும் வாட்ஸ் அப்மூலமாகவும் தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருக்கிறீர்கள்.
அழைப்பை எடுத்தால் வீட்டில் இருக்கும் பெண்களை வசை பாடுகிறீர்கள் அல்லது மிரட்டுகிறீர்கள். அதற்காக அச்சப்பட்டு கொண்டு இந்தப் பதிவை எழுதவில்லை.
கசப்பை சுவைத்த உங்கள் நாவிற்கு இந்த ஆபாச வார்த்தைகள் தான் ஆறுதல் தரும் என்றால் பேசிவிட்டு போங்கள். இடையிடையே டேய்…சங்ககிரி ராஜ்குமார் நீ எந்த ஊர் காரன்டா என்று கேட்டுச் சிரிப்பும் மூட்டுகிறீர்கள்.
உங்கள் அச்சுறுத்தலுக்கோ… ஆபாச வசவுகளுக்கோ நான் கவலைப்படவில்லை. உங்களிடம் வைக்கும் வேண்டுகோள் ஒன்றே ஒன்றுதான். எனக்கு அழைப்பதற்கு முன்பாக உங்கள் முகப்பு படமாக வைத்திருக்கும் தலைவர் பிரபாகரன் படத்தை நீக்கிவிட்டாவது அழையுங்கள்.
வீரம் நிறைந்த அவர் புகைப்படத்தைக் கண்களில் பார்த்துக் கொண்டே, காதுகளில் உங்கள் அழுக்கு வார்த்தைகளைக் கேட்பதற்கு அருவருப்பாக இருக்கிறது.
உலகே கண்டு வியந்த ஒரு ஒப்பற்ற தலைவரை முடிந்த வரை இழிவு செய்து விட்டீர்கள் இனியேனும் விட்டு விடுங்கள்.