போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது!
சென்னை மாநகராட்சியில் தனியார் மயத்திற்கு எதிராக நடைபெற்ற தூய்மை பணியாளர்களின் போராட்டம் பெரும் கவனம் பெற்றிருந்தது. இதேபோல், மதுரை மாநகராட்சியிலும் கடந்த சில நாட்களாக தூய்மை பணியாளர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மாநகராட்சி தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த பணியாளர்கள், “தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கக் கூடாது, குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க வேண்டும், பண்டிகைக் காலங்களில் போனஸ் வழங்க வேண்டும், பணிச்சுமையை குறைக்க வேண்டும்” என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர்.
மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தூய்மைப் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு பண்டிகைகால போனஸ் வழங்குவது குறித்து 10 நாட்களுக்குள் ஆலோசித்து தீர்மானிக்கப்படும் எனவும் ஊதிய நிர்ணயத்தின் அடிப்படையில் அக்டோபர்-நவம்பர் மாதம் முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதனை ஏற்க மறுத்த தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர். இந்நிலையில் இரவு நேரத்தில் மாநகர வடக்கு காவல் துணை ஆணையர் அனிதா தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி அலுவலகம் முன்பு குவிந்தனர்.
போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் அதனை தூய்மைப் பணியாளர்கள் ஏற்க மறுத்த நிலையில் அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.