1. Home
  2. தமிழ்நாடு

பிஞ்சுகளின் நெஞ்சுகளில் நஞ்சுகளை விதைக்கும் சங்கிகளின் செயல் - அமரன் திரைப்படத்துக்கு எதிர்ப்பு..!

1

திமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரபலங்கள் அமரன் திரைப்படத்தை பாராட்டி பேசியுள்ளனர். ஆனால் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக காட்ட முயற்சிப்பதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அண்மையில் வெளிவந்துள்ள அமரன் என்ற திரைப்படம் மண்ணுரிமைப் போராளிகளை தீவிரவாதிகளாக சித்திரம் தீட்டி அந்த வெறுப்பின் வீச்சை ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தின் மீதும் பரப்பும் நுண்ணிய கருத்தியல் பயங்கரவாதத்தை கைக் கொண்டிருக்கிறது.

காஷ்மீர் பைல்ஸ், கேரளா ஸ்டோரி போன்ற கயமைத்தன படங்களின் கருத்தியலை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல கலைநயமாக ஏற்றியுள்ள படமாக அமரன் இருப்பதை முற்போக்கு விமர்சகர்கள் ஆதாரங்களோடு நிறுவியுள்ளனர்.

உன்னைப் போல் ஒருவன், விஸ்வரூபம் ஆகிய திரைப்படங்களை எடுத்தும் அவற்றில் நடித்தும் முஸ்லிம் சமுதாயத்தின் மீது பயங்கரவாத களங்கத்தை கலை நுட்பத்தோடு சுமத்தி, கண்டனத்திற்கு ஆளான கமலஹாசனின் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. அவரை தேர்தலில் வென்ற பாஜக நிர்வாகி திருமதி வானதி சீனிவாசன் இப்படத்தை பள்ளிக்கூடங்களில் திரையிட வேண்டும் என்று பாராட்டுகிறார்.

பிஞ்சுகளின் நெஞ்சுகளில் நஞ்சுகளை விதைக்கும் சங்கிகளின் செயல் திட்டத்தில் வெளிப்பட்ட வார்ப்படமே இந்த போர்ப்படம் என்பதற்கு இதை விட வேறென்ன சான்று இருக்க முடியும்.

காஷ்மீரில் 'பாதி விதவைகள்' என்ற கொடூர வாழ் நிலையில் நடைப் பிணமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான அபலைப் பெண்களை இப்படம் கலை என்ற பெயரால் களங்கப்படுத்துகிறது. மண் உரிமைக்கும் தன்னுரிமைக்கும் ஜனநாயக வழியில் போராடியவர்கள் பலர் சீருடைகளில் ஒளிந்துள்ள வன்ம மிருகங்களால் வேட்டையாடப்பட்டனர்.
பல்லாயிரம் பேர் காணாமல் ஆக்கப்பட்டனர். அவர்கள் மீது அணுவளவும் அனுதாபம் காட்டாமல் அவர்கள் அத்தனை பேருமே பயங்கரவாதிகள் என்று இப்படம் சித்திரிப்பது எத்தனை கொடுமை..!” என்று குறிப்பிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like