சனாதன தர்ம வழக்கு… உச்சநீதிமன்ற அதிரடி உத்தரவு..!

சனாதன தர்மம் குறித்த கருத்துகளுக்காக, நீதிமன்றத்தின் அனுமதியின்றி தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக மேலும் வழக்குகள் பதிவு செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவு, உதயநிதிக்கு பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது. ஏனென்றால் அவர் தனது சர்ச்சைக்குரிய சனாதன தர்மம் பற்றிய கருத்துக்காக நாடு முழுவதும் பல புகார்களை எதிர்கொண்டுள்ளார். உதயநிதி ஸ்டாலின், 2023 செப்டம்பரில் சனாதன தர்மத்தை டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்களுடன் ஒப்பிட்டு, அதை ஒழிக்க வேண்டும் என்று கூறி தனது கருத்துகளால் பெரும் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டி இருந்தது. அவரது கருத்துகள் பல தரப்பிலிருந்து பரவலான எதிர்ப்புகளையும், சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தூண்டின, பல்வேறு மாநிலங்களில் அவருக்கு எதிராக பல வழக்குப்பதிவு செய்யப்பட்டன.
இடதுசாரி அமைப்பான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில், கடந்த 2023 செப்டம்பர் 1 ஆம் தேதி, சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது.
இதில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின், “இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக உள்ளது.‘சனாதன எதிர்ப்பு மாநாடு என்றில்லாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று தலைப்பிட்டுள்ளீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும்; எதிர்க்க முடியாது.” என்று பேசியிருந்தார். அவரது இந்தப் பேச்சு அரசியல் அரங்கில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் வழக்கறிஞர் பி.ஜகன்நாத், வினித் ஜின்டால் ஆகிய இருவரும், சனாதன் சுரக்ஷா பரிஷத் அமைப்பின் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மூன்று ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதில்,’தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கடந்த 2023 செப்டம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சனாதன தர்மத்தை விமர்சிக்கும் விதத்தில் பேசினார்.
அவரது இந்த பேச்சை சட்டத்துக்கு புறம்பானதாகவும், அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 25-ஐ மீறியதாகவும் அறிவிக்க வேண்டும். அத்துடன்,இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க, தமிழக டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும்.’ என்று அந்த மனுக்களில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பெலா எம்.திரிவேதி, பிரசன்னா பி.வரலே ஆகிய நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் கடந்த ஜனவரி மாதம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 32-ன், இந்த மனுக்களை எப்படி விசாரணைக்கு ஏற்றுகொள்ள இயலும் என்று கேள்வி எழுப்பினர்.
சனாதன ஒழிப்பு மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பேசியதில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் ஏதும் மீறப்படவில்லை என்றும், அவர் தெரிவித்த கருத்தில் எவ்விதவிதத் தவறும் இல்லை என்ற கூறி அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.