சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் சாலை மறியல்!
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் தொழில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் சிஐடியு சார்பில் தொழிற் சங்கம் தொடங்கப்பட்டது. இந்த சங்கத்தை அங்கீரிக்க வேண்டும், தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதுதொடர்பாக தொழிலாளர் துறை உட்பட பல்வேறு தரப்பினருடன் நடைபெற்ற பேச்சுவார்தைகள் தோல்வியில் முடிந்தன.
இந்தச் சூழ்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுலகம் நோக்கி பேரணியாக செல்ல தொழிலாளர்கள் முடிவு செய்தனர். இந்நிலையில் அங்கிருந்து பல்வேறு வாகனங்களில் வந்த தொழிலாளர்களை ஆங்காங்கே போலீஸார் மடக்கி கைது செய்தனர். இதனால் அந்தப் போராட்டத்தை தொழிலாளர்கள் திட்டமிட்டப்படி நடத்த முடியவில்லை. இதனைத் தொடர்ந்து சாம்சங் தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்தனர். போலீஸார் இவர்களின் போராட்டத்துக்கு அனுமதி அளிக்கவில்லை.
இதனால், போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களை முன்னெச்சரிக்கையாக கைது செய்யலாம் என்பதால், இன்றைய (அக்.1) மறியல் போராட்டத்துக்கு தொழிலாளர்கள் மொத்தமாக வரவில்லை. சீருடை அணியாமல் பத்துப் பத்து பேராக பிரிந்து காஞ்சிபுரம் வந்தனர். அவர்கள் தனித்தனியாக பல்வேறு இடங்களில் நின்றிருந்தனர்.ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மொத்தமாக சுமார் 400-க்கும் மேற்பட்டோர் காந்தி சிலை அருகே திரண்டனர்.
இதனை சற்றும் எதிர்பாராத போலீஸார், அவர்களை தடுத்து நிறுத்த முடியாமல் திணறினர். இதனால் கூடுதல் போலீஸார் காந்தி சிலைக்கு வரவழைக்கப்பட்டனர். அதற்குள் தொழிலாளர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 1 மணி நேரம் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்களை போலீஸார் கைது செய்தனர்.