சாமி எனக்கு எதுவும் செய்யவில்லை... சென்னையில் கோவில் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசிய ஆசாமி..!
கொத்தவால்சாவடி கோவிந்தப்ப நாயக்கர் தெரு பகுதியில் வீரபத்திர சுவாமி கோயில் உள்ளது. இதே பகுதியில் முரளி கிருஷ்ணன் (38) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 4 ஆண்டுகளாக இந்த கோயிலில் தரிசனம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மதுபோதையில் வந்த முரளி கிருஷ்ணன், கையில் வைத்திருந்த பெட்ரோல் குண்டை கோயிலில் வீசினார். அப்போது கோயில் உள்ளே இருந்த பூசாரி, வெளியே ஓடிவந்தார். இதனால் அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
நான்கு ஆண்டுகளாக தரிசனம் செய்து வந்தும் கடவுள் தனக்கு எதுவும் கொடுக்கவில்லை என்றுகூறி முரளி கிருஷ்ணன் பெட்ரோல் குண்டை வீசியதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த கொத்தவால்சாவடி போலீஸார் பெட்ரோல் குண்டு வீசிய போதை ஆசாமி முரளிகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.