பணத்திற்காக கருவின் பாலினத்தை தெரிவித்த சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர் பணியிடை நீக்கம்..!
சேலம் மாவட்ட சுகாதாரத் துறையினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், செம்மங்குறிச்சி ஆகிய பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது சட்டத்திற்கு புறம்பாக கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறியும் கும்பலை அவர்கள் மடக்கி பிடித்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில், இந்த குற்றத்தில் ஈடுபட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணியின் வயிற்றில் வளர்ந்த சிசுவின் பாலினத்தை, சேலம் அரசு மருத்துவமனையில் ஸ்கேன் செய்து பார்த்து மருத்துவர் ஒருவர் தெரிவித்தது தெரியவந்தது. இதற்காக, அந்த கர்ப்பிணியிடம் இருந்து சேலத்தை சேர்ந்த இடைத்தரகர் ஸ்ரீராம், தர்மபுரியைச் சேர்ந்த இடைத்தரகர் சகாயமேரி ஆகியோர் ரூ.18 ஆயிரம் கமிஷன் பெற்றதும் தெரியவந்தது.
இதன் அடிப்படையில், சுகாதாரத் துறை அதிகாரிகள் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர். இதில், சேலம் அரசு மருத்துவமனையின் ரேடியாலஜி (Radiology) மருத்துவர் தியாகராஜன், இந்த புரோக்கர்களிடம் இருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டது உறுதி செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவர் தியாகராஜன், இடைத்தரகர் ஸ்ரீராம் ஆகியோரை கைது செய்து, சேலம் அரசு மருத்துவமனை புற காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரையும் கைது செய்து செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து மருத்துவ குழுவினர், மருத்துவர் தியாகராஜன் மீதான விசாரணை அறிக்கையை, சென்னையில் உள்ள மருத்துவ கல்வி ஆராய்ச்சி இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். அந்த அறிக்கையின் அடிப்படையில், கருவின் பாலினத்தை தெரிவித்த மருத்துவ தியாகராஜனை பணியிடை நீக்கம் செய்து மருத்துவ கல்வி ஆராய்ச்சி இயக்குநர் சுகந்திராஜகுமாரி உத்தரவிட்டார்.