சேலம் சிலிண்டர் வெடிப்பு.. பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரிப்பு..!

சேலத்தில், சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.
சேலம் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்புத்துறையில் சிறப்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் பத்மநாபன். இவர், கருங்கல்பட்டி பாண்டுரங்கன் தெருவில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், பத்மநாபன் வீட்டில் இன்று காலை சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் அவரது வீடு மற்றும் சுற்றியுள்ள 5 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. இதில், கட்டட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புப் படையினர், போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ராஜலெட்சுமி என்ற பெண் ஏற்கனவே உயிரிழந்தார்.
இந்நிலையில், கட்டட இடிபாடுகளில் சிக்கி மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சிலிண்டர் விபத்து ஏற்பட்ட வீட்டின் உரிமையாளர் பத்மநாபன் மற்றும் அவரது மனைவி தேவியின் உடல்களை இடிபாடுகளில் இருந்து தீயணைப்புப் படையினர் மீட்டுள்ளனர். இதனால், கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கட்டட இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கி இருக்கலாம் என்பதால் அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.