1. Home
  2. தமிழ்நாடு

இன்று முதல் 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை..!!

1

தமிழகத்தில் தக்காளி விலை ரூ.130-ஐ எட்டியுள்ள நிலையில், ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்வது தொடர்பாக, கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர்: "தக்காளி விலையை குறைப்பதற்கும், மேலும் விலை அதிகரிக்காமல் இருப்பதற்கான ஆக்கபூர்வமான பணிகளை துறையின் அலுவலர்களுடன் கலந்துபேசி, உரிய நடவடிக்கைகளை முதல்வரின் ஆலோசனையைப் பெற்று செயல்படுத்தி வருகிறோம்.

ஏற்கெனவே நடந்த ஆய்வுக்கூட்டத்திலும், விலையேற்றத்தைக் குறைக்கவும், தக்காளியை வாங்கி பயன்படுத்தும் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதை கருத்தில்கொண்டு, தமிழகத்தில் இருக்கக்கூடிய 62 பண்ணை பசுமை கடைகளில் வழக்கத்தைவிட கூடுதலாக கொள்முதலை அதிகரித்து மக்களுக்கு தக்காளியை விற்பது என முடிவெடுத்து செயல்படுத்தினோம்.

மேலும் தக்காளியை நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்யலாமா என்று ஒரு யோசனை இருந்தது. அதை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம்.

முதல்கட்டமாக, சென்னையில் வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை என்று 3 பகுதிகளாகப் பிரித்து, வடசென்னையில் 32 கடைகளிலும், மத்திய சென்னையில் 25 கடைகளிலும், தென் சென்னையில் 25 கடைகள் என மொத்தம் 82 நியாய விலைக்கடைகளில் தக்காளி விற்பனையைத் தொடங்கவிருக்கிறோம்.

இதுமட்டுமின்றி, ஏற்கெனவே சென்னையில் 27 பண்ணை பசுமை கடைகள் உள்ளன.அதிலும் இந்த விற்பனை தொடரும். நகரும் பசுமை பண்ணை வாகனங்கள் 2 என, ஆக மொத்தம் சென்னையில் 111 கடைகளில் இந்த தக்காளி விற்பனை செய்யப்படும். 50 முதல் 100 கிலோ வரை தேவைக்கேற்ப விற்பனை செய்யப்படும்.

பண்ணை பசுமை கடைகளில் விற்பனை செய்யப்படும் அதே விலைக்கே நியாய விலைக் கடைகளிலும் தக்காளி விற்கப்படும். சென்னையில் தொடங்கப்படும் இந்த விற்பனை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இந்த 111 கடைகளின் விற்பனையைப் பொருத்து, அனைத்து மாவட்டங்களிலும் எல்லா கடைகளிலும் இல்லாவிட்டாலும்கூட, ஒரு குறிப்பிட்ட சதவீதத்திலான நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like