தீபாவளி மறு நாள் இறைச்சி விற்பனை செய்ய தடை..!

மகாவீா் நிா்வான் தினத்தை முன்னிட்டு, பொது சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் 4 இறைச்சிக் கூடங்கள் நவ.13-ஆம் தேதி மூடப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மகாவீா் நிா்வான் தினத்தை முன்னிட்டு அரசு உத்தரவின் படி, சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத் துறையின் (கால்நடை மருத்துவப் பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் 4 இறைச்சிக் கூடங்களும் மூடப்படும்.
இதுபோல், ஜெயின் கோயில்களிலிருந்து 100 மீட்டா் சுற்றளவில் உள்ள இறைச்சி கடைகள் மூடப்படும், அந்தப் பகுதியில் இறைச்சி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கு வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமண மதத்தின் மிக முக்கிய துறவி மகாவீரர். இவர் வாழ்ந்த காலத்தில் பிற உயிர்களிடத்தில் அன்பு காட்டியவர். குறிப்பாக புலால் புசித்தலை மறுத்தவர். மிருகங்களைத் துன்புறுத்தவோ, கொல்லவோ கூடாது என்ற கருத்தை தீர்க்கமாக முன்வைத்தவர். இவர் முக்தி (மரணம்) அடைந்த நாள் சமண மதத்தைச் சேர்ந்தவர்களால் தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .