ஜார்க்கண்ட் மற்றும் கேரளாவில் இறைச்சி விற்க தடை..!
ஒடிசாவில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு பறவைக் காய்ச்சல் பரவியிருக்கலாம் என ஜார்க்கண்ட் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட கோழிப்பண்ணைகளைச் சுற்றி சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்துப் பண்ணைகளின் கோழி, வாத்துகளை அழிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்தப் பகுதியில் கோழி இறைச்சி, கோழி முட்டைகளை விற்கவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக கேரள மாநிலத்தின் ஆலப்புழா மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான கோழிகளும் வாத்துகளும் அழிக்கப்பட்டன. பின்னர் ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் தென்பட்டன.
இப்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. அந்த மாநிலத் தலைநகர் ராஞ்சி அருகேயுள்ள கோழிப்பண்ணையில் எச்5என்1 வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டு, அங்குள்ள கோழிகள் அழிக்கப்பட்டு விட்டன.
பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு சிகிச்சை அளித்த கால்நடை மருத்துவர்கள் இரண்டு பேர் மற்றும் கோழி பண்ணையில் பணியாற்றிய 6 ஊழியர்கள் ராஞ்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் மேலும் 3 இடங்களில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டு, ஆலப்புழா 7வது வார்டு, எடத்துவா 10வது வார்டு, தகழி பஞ்சாயத்து வது வார்டில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டு, ஒரு கிலோமீட்டர் சுற்றளவு, நோயால் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் வாத்துகள், முட்டைகள், போன்றவற்றை அழிக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நோய் பரவல் காரணமாக வாத்து இறைச்சி மற்றும் முட்டை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 கிலோ மீட்டருக்கு கண்காணிப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.