அதிமுகவை தற்போது வழிநடத்துபவர்களை பார்த்தால் அச்சமாக இருக்கிறது - சைதை துரைசாமி..!

அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக உள் துறை அமைச்சர் அமித்ஷா வெளிப்படையாக பேட்டி அளித்தார். கூட்டணி உறுதியாகிவிட்டதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகின. இந்த சூழலில் அதிமுக மூத்த தலைவர் சைதை துரைசாமி, அதிமுகவினர் ஒன்றுபட வேண்டும் என்றும், பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் எனவும் அறிக்கை விட்டார்.
இதற்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு எழ, சைதை துரைசாமிக்கு ஐடி விங் வாயிலாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், சைதை துரைசாமியை வேலைவெட்டி இல்லாதவர் என கே.பி.முனுசாமி விமர்சனம் செய்தார். தொடர்ச்சியாக அவரை அதிமுகவினர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சைதை துரைசாமி, “எனது மனிதநேயம் ஐஏஎஸ் அகாடமி மூலமாக பலம் அரசு அதிகாரிகளாக மாறியுள்ளனர். ஜனநாயகத்தின் தூண்களுக்கு ஆணிவேராக இருக்கும் சேவையை செய்து வருகிறேன். அதிமுகவுக்காக பல்வேறு தியாகங்கள் செய்தவர் நான். என் மீது 17 வழக்குகள் உள்ளன. அதில் முதல் வழக்கே, கருணாநிதிக்கு எலுமிச்சம் பழ மாலை அணிவித்ததற்காக என் மீது பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கு.
இளம் வயது முதல் அதிமுகவுக்காக பணியாற்றி வரும் நான், தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி காப்பாற்றப்பட வேண்டும் என நினைக்கிறேன். அதிமுக சில சுயநலவாதிகளால் சீரழிந்துவிடக் கூடாது. பாஜகவுடன் ஏன் கூட்டணி வைக்க வேண்டும் என்று என்னிடம் கேளுங்கள், அதுகுறித்து விவாதிப்போம். இரு கட்சிகளும் தனித் தனி அணியாக இருந்து பெற்ற வாக்குகளை கூட்டிப் பார்த்தால், 26 இடங்களுக்கு மேல் கிடைத்திருக்கும். அதிமுகவுக்கு இரண்டு மத்திய அமைச்சர் பதவி கிடைத்திருக்கும்.
இதுகுறித்து சிந்திக்கச் சொன்னால் என்னை வேலை வெட்டி இல்லாதவன் என்று விமர்சனம் செய்கிறார்கள். அதிமுகவை இன்று வழி நடத்துபவர்களை பார்த்தால் அச்சமாக உள்ளது” என்று தெரிவித்தார்.