தேனியில் சோகம்..! குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைக்குப் பின் சுயநினைவு இழந்த பெண்..!
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்த வீரமகேஷ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: என் மனைவி ரேகா. எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற குடும்பக் கட்டுப்பாட்டு முகாமில் மனைவி பங்கேற்றார். அவருக்கு 14.6.2023-ல் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சை முடிந்து வெளியே அழைத்து வந்தபோது என் மனைவி சுயநினைவு இழந்திருந்தார்.
உடனடியாக தேனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் இன்னும் சரியாகவில்லை. என் மனைவியின் தற்போதைய நிலைக்கு மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம். எனவே மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைக்கு பிறகு சுயநினைவு இழந்த பெண்ணை மேல் சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும். அவருக்கு அளித்த சிகிச்சையில் குறைபாடு உள்ளதா என்பது குறித்து மருத்துவ அதிகாரிகள் 6 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை முடிவு செய்யப்படும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.