1. Home
  2. தமிழ்நாடு

மண் காப்போம் இயக்கத்தின் 3-ஆம் ஆண்டு நிறைவையொட்டி சத்குரு கருத்து..!

Q

மண் காப்போம் இயக்கத்தின் மூன்றாமாண்டு நிறைவையொட்டி, “மண்ணை காக்க மனிதகுலம் ஒன்றிணைய வேண்டும்” என சத்குரு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அதனுடன் இவ்வியக்கத்தின் 3 ஆண்டு கால செயல்பாடுகள் குறித்த காணொளியையும் அவர் வெளியிட்டு உள்ளார்.  
இது தொடர்பான சத்குருவின் எக்ஸ் தள பதிவில் "நாம் அனைவரும் மண்ணிலிருந்து பிறக்கின்றோம், மண்ணில் வாழ்ந்து, இறுதியில் மண்ணிலேயே திரும்புகின்றோம். மண், நாம் உருவாக்கிய அனைத்துப் பிரிவுகள் மற்றும் பிரிவினைகளுக்கும் அப்பால் மண் நம்மை ஒன்றிணைக்கிறது. இதை விழிப்புணர்வுடன் உணரவும், மண்ணை காக்கவும் மனிதகுலம் ஒன்றிணைய வேண்டும். 
நாம் மண் காப்போம் இயக்கத்தை தொடங்கிய மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தற்போது விழிப்புணர்வான கிரகத்தை உருவாக்க மண் காக்கப்பட வேண்டியதே முதல் படி என்று மெதுவாக உலகம் அங்கீகரிக்க துவங்கியுள்ளது. நாம் ஒரு செழிப்பான சுற்றுச்சூழலை உருவாக்கினால் மட்டுமே, நமது பொருளாதாரங்கள் செழிக்க முடியும் - வேறு எந்த வகையிலும் இல்லை. ஒவ்வொரு நாட்டின் குடிமக்களும் தங்கள் நாட்டின் மண்ணை பாதுகாக்க உறுதிமொழி எடுக்க வேண்டும். இதுவே மனிதகுலத்திற்கான வழி. நாம் இதை சாத்தியமாக்க வேண்டும்." என்று கூறியுள்ளார். 


 


 

சத்குரு, மண் காப்போம் இயக்கத்தினை கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 21 அன்று துவங்கினார். இந்த இயக்கம் விவசாய மண்ணில் குறைந்தது 3 முதல் 6% வரை அங்கக கரிமத்தை பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை உலகளவில் அரசாங்க கொள்கை வகுப்பாளர்களிடம் வலியுறுத்தி, அவர்களை இது தொடர்பான செயல்பாடுகள் நோக்கி உந்தி தள்ளும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.
சத்குரு அவர்கள் வெளியிட்டுள்ள காணொளியில், “மண் காப்போம் இயக்கம் துவங்கி 3 ஆண்டுகளில் உலகளவில் பல்வேறு அரசாங்கங்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது. குறிப்பாக ஐநாவின் சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் பல சர்வதேச அமைப்புகள் (UNCCD, WFP, மற்றும் IUCN) மண் காப்போம் இயக்கத்துடன் அதிகாரபூர்வமாக இணைந்துள்ளன. 
இந்த இயக்கம் உலகளாவிய அளவில் நடைபெறும் சர்வதேச சுற்றுச்சூழல் மாநாடுகளான UNFCCC-யின் COP28 (துபாய்), COP29 (அசர்பைஜான்) மற்றும் பாலைவனமாதலை தடுக்கும் ஐநாவின் அமைப்பான UNCCD-யின் COP16 (சவுதி அரேபியா) உள்ளிட்ட பல்வேறு மாநாடுகளில் முக்கிய பங்கு வகித்துள்ளது.
இவ்வியக்கம் எகிப்தின் செகம் (SEKEM) மற்றும் 4p1000 உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து COP29 மற்றும் COP16 உள்ளிட்ட காலநிலை மாநாடுகளின் கொள்கை விளக்கக் குறிப்புகளை உருவாக்கியது. இந்த கொள்கைகள் தற்போது 150-க்கும் மேற்பட்ட உலகளாவிய அமைப்புகளின் ஒப்புதலைப் பெற்றுள்ளது.
நேபாளம், கஸகஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இவ்வியக்கம் உருவாக்கிய ‘மண் காப்போம் கொள்கைகளை’ செயல்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoUs) கையெழுத்திட்டுள்ளன.
இவ்வியக்கத்தால் ஈர்க்கப்பட்டு குஜராத்தின் பானாஸ்கந்தா மாவட்ட விவசாயிகள் 2024-இல் "பானாஸ் மண் காப்போம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் (BSSFPC)" என்ற நிறுவனத்தை நிறுவினர். இதில் மண் பரிசோதனை ஆய்வகம் மற்றும் நவீன உயிர் வேளாண் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு மண்வளம் குறித்த துல்லியமான தகவல்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பான கரிம உரங்கள் குறித்த ஆலோசனை மற்றும் பரிந்துரைகளை வழங்குகிறது.
இவ்வியக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து உலகளவில் இதுவரை 30 லட்சம் குழந்தைகள் அவர்கள் நாட்டுத் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். உலகில் 400 கோடி மக்களிடம் மண்வள பாதுகாப்பு குறித்த செய்திகள் சென்று சேர்ந்துள்ளது. மேலும் மண்வளம் மீட்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி 60 நாடுகளில் சுவர் ஓவிய இயக்கம் நடத்தப்பட்டுள்ளது.
மேலும் நயாகரா நீர்வீழ்ச்சி, ஜெட் டியோ (ஜெனிவா), புர்ஜ் கலிபா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட முக்கிய நினைவுச்சின்னங்கள் மண் காப்போம் இயக்கத்தின் பிரசாரத்திற்காக ஒளிர்விக்கப்பட்டன. 2023-இல் இவ்வியக்கம் ‘நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான சிறந்த சமூக பிரச்சாரம்’ என்ற விருதினைப் பெற்றது.” எனக் கூறப்பட்டுள்ளது. 

Trending News

Latest News

You May Like