1. Home
  2. தமிழ்நாடு

இளைஞர்களை தெளிவு நோக்கி நகர்த்துகிறது சத்குருவின் லாஜிக்கலான பதில்கள்..!

Q

ஈஷா லைஃப் சார்பாக சத்குருவின் புதிய தமிழ் புத்தகமான 'கர்மா - விதியை வெல்லும் சூத்திரங்கள்' சென்னையில் நேற்று (ஜூன் 28) அறிமுகம் செய்யப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய திருமதி பாரதி பாஸ்கர், "இன்றைய இளைஞர்கள் நம் புராணங்களில் இருந்து எழுப்புகிற கேள்விகளை புறக்கணிக்காமல், அவர்களுக்கு புரியும் வகையில் லாஜிக்கலாக சத்குரு அவர்கள் சொல்லும் பதில்கள் என்னை பெரிதும் கவர்ந்தது, இது தான் இன்றைய இளைஞர்களுக்கு மிகத் தேவையானதாக இருக்கிறது. அது குழம்புகிற அவர்களின் மனங்களை தெளிவு என்கிற பாதையில் செலுத்துகிறது " எனக் கூறினார். 

சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள பாரதிய வித்யா பவனில் இன்று மாலை நடைப்பெற்ற இந்த விழாவில் புத்தக அறிமுகப் பிரதியை இயக்குனரும், நடிகருமான திருமதி. சுஹாசினி மணிரத்னம் அவர்கள் வெளியிட, அதனை ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. எம். முரளி அவர்கள் பெற்றுக் கொண்டார்.
அதனை தொடர்ந்து கலைமாமணி திரு. மரபின் மைந்தன் முத்தையா மற்றும் பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் திருமதி பாரதி பாஸ்கர் ஆகியோர் கர்மா தமிழ் புத்தகம் குறித்த சிறப்புரையை வழங்கினர். 
இவ்விழாவில் சுஹாசினி அவர்கள் பேசியதாவது "என் வீட்டில் நான் தான் பொல்லாதவள், ஆனால் என் அளவிற்கான வெற்றி நல்லவர்களுக்கு கிடைக்கவில்லை. எனில் கர்மா என்றால் என்ன? என்பது போன்ற பல கேள்விகள் எனக்கு உண்டு. இது போல பலருக்கும் இருக்கும் பல கேள்விகளுக்கான பதிலை இந்த புத்தகத்தை படித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும்" என கூறினார்.
அதைத் தொடர்ந்து விழாவில் சிறப்புரை ஆற்றிய மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் பேசுகையில், "ஒரு செயல் நிஜத்தில் நடப்பதை காட்டிலும் எண்ணத்தால் நடக்கிற போது அதற்கு அடர்த்தி அதிகம் என்கிறார் சத்குரு. இதை தான் திருவள்ளுவர் 'உள்ளத்தால் உள்ளலும் தீதே' - அதாவது மனதால் நினைப்பது தான் அதிக கர்ம வினைகளை ஏற்படுத்தும் என்கிறார். மேலும், பல காலமாக 'இன்னாது அம்ம, இவ்வுலகம்; இனிய காண்க, இதன் இயல்புணர்ந்தோரே' என்ற சங்க இலக்கிய பாடல் வரி புரியாமல் இருந்தது. 
ஆனால் சத்குரு அவர்கள் இந்தப் புத்தகத்தில் விளக்கிய பிறகு இந்த உலகம் துன்பமயமானது என நாம் முடிவு செய்ய காரணம் உலகின் இயல்பினால் அல்ல, நம் இயல்பினால். எனவே உலகின் இயல்பு இன்பமும் அல்ல, துன்பமும் அல்ல அது உங்களின் எண்ணத்தில் தான் இருக்கிறது என்பதை தான் 2000 ஆண்டுகள் முன்பு சங்க இலக்கியத்தில் சொன்னார்கள் என்பதை சத்குருவின் இந்த புத்தகம் வழியே உணர முடிகிறது.
நான் வாசித்த வரையில் கர்மா சார்ந்த இது போன்ற முழுமையான ஒரு நூலை நான் கண்டதில்லை. இதை அருளிய சத்குருவிற்கு நன்றி" இவ்வாறு பேசினார்.
அவரை தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய திருமதி பாரதி பாஸ்கர் அவர்கள் பேசியதாவது, " இன்றைய இளைஞர்கள் நம் புராணங்களில் இருந்து எழுப்புகிற கேள்விகளை புறக்கணிக்காமல், அவர்களுக்கு புரியும் வகையில் லாஜிக்கலாக சத்குரு அவர்கள் சொல்லும் பதில்கள் என்னைப் பெரிதும் கவர்ந்தது, இது தான் இன்றைய இளைஞர்களுக்கு மிகத் தேவையானதாக இருக்கிறது. அது குழம்புகிற அவர்களின் மனங்களை தெளிவு என்கிற பாதையில் செலுத்துகிறது.
கர்மா புத்தகத்தில் ஓரிடத்தில் உங்களால் நியாபகங்களும், கனவுகளும் இல்லாத நிகழ்காலத்தில் விழிப்புணர்வுடன் ஒரு நொடி இருக்க முடிந்தால் கர்மா ஒரு சுமையில்லை என்கிறார் சத்குரு. ஒரு புத்தகத்தின் வெற்றி அதை மூடிய பின் ஏற்படுத்தும் தாக்கத்தில் தான் இருக்கிறது. அந்த வகையில் இந்த புத்தகம் எனக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது, உங்களுக்கும் ஏற்படுத்தும்" இவ்வாறு அவர் பேசினார்.
'கர்மா - விதியை வெல்லும் சூத்திரங்கள்' புத்தகம் முதலில் 2021-ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்தது. ஆங்கிலப் புத்தகம் வெளியானது முதல் தற்போது வரை பல லட்சக்கணக்கான பிரதிகளுக்கு மேல் விற்று சாதனை படைத்து வருகிறது.
மேலும் புத்தக வாசிப்பாளர்களால் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில் ஆங்கில புத்தகத்திற்கு சர்வதேச அளவில் 4.7 ரேட்டிங்கும் (மதிப்பீடு), 15,000-க்கும் அதிகமான மதிப்புரைகளும் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் ஆங்கிலப் புத்தகம் NEWYORK BEST SELLER லிஸ்ட்டில் இடம்பிடித்தது. அத்தோடு 25-க்கும் அதிகமான உலக மொழிகளில், இந்த புத்தகத்திற்கான மொழிபெயர்ப்பு உரிமம் கையெழுத்தாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like