1. Home
  2. தமிழ்நாடு

நம் மண்ணைக் காக்கும் பெரும் சீர்திருத்தம் : சத்குரு வரவேற்பு..!

1

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் விவசாய நிலங்களில் மரம் சார்ந்த விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், அது தொடர்பான மாதிரி விதிகளை வெளியிட்டுள்ளது. 

அதில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல், காடுகளுக்கு வெளியே மரங்களின் பரப்பை அதிகரித்தல், டிம்பர் மர இறக்குமதியை குறைத்தல் மற்றும் காலநிலை மாற்றத்தைக் கையாளுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டும் மரம் சார்ந்த விவசாயத்தை ஊக்குவிப்பதற்காகவும், விவசாய நிலங்களில் மரங்களை வெட்டுவதற்கான மாதிரி விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

இந்த விதிகளின் மாதிரி நகல்கள் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் அடுத்தகட்ட நகர்வுகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

இதுகுறித்த சத்குருவின் எக்ஸ் தளப் பதிவில், “நமது விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்கவும், பசுமைப் பரப்பை அதிகரிக்கவும், பாரதத்தின் மண்ணைக் காக்கவும் நமக்குத் தேவைப்படும் ஒரு பெரும் சீர்திருத்தம் இது. புதிய வேளாண் காடு வளர்ப்பு விதிகளானது, விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் மரங்களை வளர்ப்பதன் மூலம் பொருளாதார லாபம் ஈட்டுவதை ஊக்குவிக்கும். 

அதுமட்டுமின்றி, இது உலகெங்கிலும் சட்டப்பூர்வமான சந்தைகளை உறுதிசெய்து, மரம் வளர்ப்பை நோக்கி விவசாயிகளை மேலும் ஊக்கப்படுத்தும். இந்த மைல்கல் போன்ற முற்போக்கான சீர்திருத்தத்தை முன்னெடுத்த சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு வாழ்த்துக்கள்.

பொருளாதாரமும் சூழலியலும் ஒன்றுக்கொன்று துணைநின்று, மண், நீர், நமது விவசாயிகள் மற்றும் தேசத்திற்கு அனைத்து வகையிலும் பலன்களை அளிக்கும் என்பதை இந்தச் சீர்திருத்தம் உலகுக்கு நிரூபிக்கும்” எனத் தெரிவித்துள்ளார். 


 


சத்குரு அவர்களால் தொடங்கப்பட்ட காவேரி கூக்குரல் இயக்கம், மரம் சார்ந்த விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையிலான சட்ட நெறிமுறைகளை வகுக்க மத்திய, மாநில அரசுகளிடம் நீண்ட காலமாக கோரிக்கைகளை முன்வைத்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

இவ்வியக்கம் மரம் சார்ந்த விவசாயத்தை விவசாயிகளிடையே பெருமளவில் முன்னெடுத்து வருகிறது. இதற்காக தேசிய வேளாண் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் மற்றும் முன்னோடி விவசாயிகளை ஒருங்கிணைத்து மெகா கருத்தரங்குகளை நடத்தி வருகிறது. அதில் மஞ்சள், மிளகு, அவகேடோ, ஜாதிக்காய் மற்றும் பட்டை, லவங்கம், ஏலக்காய் உள்ளிட்ட நறுமணப் பயிர்களை மரங்களுக்கு இடையே வளர்த்தல் மற்றும் மதிப்பு கூட்டுதல் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.  

மேலும் இவ்வியக்கம் சார்பில் 150 முழு நேர பணியாளர்கள் விவசாயிகளின் நிலங்களுக்கு நேரில் சென்று மண் மற்றும் நீரின் தன்மையை சோதித்து அவர்களின் மண்ணுக்கேற்ற மரங்களை பரிந்துரை செய்து வருகின்றனர். 
இதனுடன் கடலூர் மற்றும் திருவண்ணாமலையில் 2 பிரம்மாண்ட உற்பத்தி நாற்றுப் பண்ணைகள், தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட விநியோக நாற்றுப் பண்ணைகளையும் இவ்வியக்கம் நடத்தி வருகிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு மிகக் குறைந்த மானிய விலையில் மரக்கன்றுகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 
 

Trending News

Latest News

You May Like