1. Home
  2. தமிழ்நாடு

சத்குரு பதில் : எந்தத் திசையில் படுத்து உறங்க வேண்டும்?

1

வடக்கே தலைவைத்துப் படுக்கக்கூடாது என்று சொன்ன பெரியவர்களை எப்போதும் ஏளனம் செய்கிறீர்களா? இது வெறுமனே இன்னொரு மூடநம்பிக்கைதானா? வெளிப்பார்வைக்கு விசித்திரமாக இருக்கும் இந்த பரிந்துரைக்குப் பின்னால் உள்ள காரணங்களை சத்குரு விளக்குகிறார்.

இந்தியாவில், நீங்கள் உறங்கும்போது வடக்கே தலைவைத்துப் படுக்கக்கூடாது என்று உங்களுக்கு சொல்லப்பட்டு இருக்கிறது. ஏன்?

உங்கள் இருதயம் உடலின் கீழ்ப்பாதியில் இல்லாமல், முக்கால் பங்குக்கு மேலே இடம்பெற்றுள்ளது. ஏனென்றால் இரத்தத்தை கீழ்நோக்கி உந்தித்தள்ளுவதைவிட, புவிஈர்ப்புக்கு எதிராக மேல்நோக்கி உந்தித்தள்ளுவது மிகவும் கடினமானது. கீழ்நோக்கி செல்லும் இரத்தநாளங்களுடன் ஒப்பிட்டால், மேல்நோக்கிச் செல்லும் இரத்தநாளங்கள் மிக மெல்லிய அமைப்பில் உள்ளன. இரத்தக்குழாய்கள் மேல்நோக்கி மூளைக்குள் செல்லும்போது, ஏறக்குறைய மயிரிழைபோல் இருப்பதால், அவைகளால் கூடுதலாக ஒரு துளியளவு இரத்தத்தைக்கூட எடுத்துக்கொள்ள முடியாது. கூடுதலாக ஒரு துளி இரத்தம் உள்ளே ஏற்றப்பட்டுவிட்டால், ஏதோவொன்று வெடித்து, இரத்தக்கசிவு ஏற்பட்டுவிடும்.

பெரும்பாலானவர்களுக்கு அவர்களது மூளையில் இரத்தக்கசிவு இருக்கிறது. இது பெரியஅளவில் அவர்களை எந்த விதத்திலும் செயலிழக்கச் செய்வதில்லை. ஆனால் சற்று மந்தமாக இருப்பதைப் போன்ற சிறிய பாதிப்புகள் நிகழ்கின்றன. மக்களுக்கு இந்தவிதமான பாதிப்பு இருந்துகொண்டிருக்கிறது. நீங்கள் அதை மேம்படுத்துவதற்கு அதீத கவனம் செலுத்தவில்லை என்றால் உங்கள் புத்திசாலித்தனம், 35 வயதுக்குமேல் பலவழிகளில் குறையத் தொடங்குகிறது. நீங்கள் உங்கள் ஞாபகசக்தியின் காரணமாகத்தான் பலவற்றையும் கையாள்கிறீர்கள், புத்திசாலித்தனத்தினால் அல்ல.

வடக்கு முகமாக உறங்கினால் என்ன நிகழ்கிறது?

உங்களுக்கு ஏதேனும் இரத்தம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், உதாரணமாக, இரத்தசோகை என்று வைத்துக்கொள்வோம், ஒரு மருத்துவர் என்ன பரிந்துரைப்பார்? இரும்புசத்து. அது உங்கள் இரத்தத்தில் இருக்கும் ஒரு முக்கியமான மூலப்பொருள். நீங்கள் பூமியின் மீதிருக்கும் காந்தப்புலன்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்கள். பல வழிகளிலும், பூமியானது அதனுடைய காந்தத்தன்மையால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பூமியின் மீது காந்தவிசைகள் அவ்வளவு சக்திவாய்ந்ததாக இருக்கிறது.

தலை வைத்து படுக்கும் திசை: எது சிறந்தது?

உடல் கிடைமட்டமாக இருக்கும்போது, உடனே உங்கள் நாடித்துடிப்பு குறைவதை உங்களால் உணரமுடியும். உங்கள் உடல் இந்த மாற்றத்தைச் செய்வது ஏனென்றால், இரத்தம் ஒரே அளவில் பாய்ந்தால், உங்கள் தலைக்குள் அதிக அளவில் இரத்தம் சென்று, பாதிப்பை உருவாக்கிவிடும். இப்போது, நீங்கள் வடக்கு திசையில் தலைவைத்துப் படுத்தவாறு 5-6 மணி நேரங்களுக்கு அதே நிலையில் இருந்தீர்கள் என்றால், காந்த ஈர்ப்பு உங்கள் மூளையின் மீது அழுத்தத்தை ஏற்படுத்திவிடும். நீங்கள் ஒரு குறிப்பிட்ட வயதைக் கடந்தவராக இருந்து, உங்கள் இரத்தநாளங்களும் பலவீனமாக இருந்ததென்றால், இரத்தக்கசிவும், பக்கவாதமும் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. அல்லது உங்கள் உடல் உறுதியாக இருந்து, இந்த விஷயங்கள் நிகழவில்லை என்றாலும், நீங்கள் உறங்கும்போது மூளைக்குள் பாயவேண்டியதைக் காட்டிலும் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகமானால், நீங்கள் ஒரு பதற்றத்துடன் எழுந்திருக்க வாய்ப்புள்ளது. இதனை நீங்கள் ஒருநாள் செய்தால் நீங்கள் இறந்துவிடுவீர்கள் என்பது இல்லை. ஆனால் தினசரி இதைச் செய்தால், நீங்கள் தொந்தரவை விலைக்கு வாங்குகிறீர்கள். எந்தவிதமான தொந்தரவு என்பது உங்கள் உடல் எந்தஅளவுக்கு உறுதியாக உள்ளது என்பதைப் பொறுத்தது.

அப்படியானால், தலைவைத்துப் படுத்து உறங்குவதற்கு எந்தத் திசை சிறந்தது? கிழக்குதான் சிறந்த திசை. வடகிழக்கு மற்றும் மேற்கு திசை சரியானது. வேறுவழி இல்லையென்றால், தெற்கு திசையில் உறங்கலாம். வடக்கு திசையில் உறங்கக்கூடாது. நீங்கள் பூமியின் வடக்கு அரைக்கோளத்தில் இருக்கும்வரை இது உண்மை. வடக்கு திசை தவிர வேறு எந்தத் திசைநோக்கித் தலைவைத்துப் படுத்தாலும் சரியானது. தெற்கு அரைக்கோளத்தில் இருக்கும்போது, நீங்கள் தெற்கு திசையில் தலைவைக்கக்கூடாது.

உறக்கத்தில் இருந்து எப்படி எழுந்துகொள்வது?

உங்கள் உடலியலில், இருதயம் ஒரு முக்கியமான அம்சமாக உள்ளது. உங்கள் உடல் முழுதும் உயிரோட்டத்தைப் பாய்ச்சக்கூடிய முனையம் - இந்த ஒரு விஷயம் நிகழவில்லை என்றால், எதுவும் நிகழ்வதில்லை – உங்களது இடது பக்கத்திலிருந்து தொடங்குகிறது. இந்தியக் கலாச்சாரத்தில் எப்போதும் சொல்லப்படுவது என்னவென்றால், நீங்கள் கண் விழிக்கும்போது, உங்கள் வலதுபக்கமாகப் புரண்டு, பிறகே படுக்கையை விட்டு எழவேண்டும். உங்கள் உடல் ஒரு குறிப்பிட்ட தளர்வுநிலையில் இருக்கும்போது, அதனுடைய வளர்சிதைமாற்ற செயல்பாடு மிகவும் குறைவாக இருக்கிறது. நீங்கள் எழுந்திருக்கும்போது, அந்த செயல்பாடு சட்டென்று அதிகரிக்கிறது. அதனால் நீங்கள் வலதுபுறம் புரண்டபிறகு எழவேண்டும். ஏனென்றால் வளர்சிதைமாற்ற செயல்பாடு குறைவாக இருக்கும்போது, நீங்கள் உடனே இடதுபக்கம் புரண்டால் உங்கள் இருதய அமைப்பின்மீது அழுத்தம் உண்டாக்குவீர்கள். 

உங்கள் உடல் மற்றும் மூளையைத் தூண்டிவிடுங்கள்

இந்தப் பாரம்பரியத்தில், நீங்கள் காலையில் எழுவதற்கு முன் உங்கள் கைகளை ஒன்றோடொன்று நன்றாகத் தேய்த்து, உங்களது உள்ளங்கைகளை கண்கள் மீது வைத்துக்கொள்ள வேண்டும் என்றுகூடச் சொல்லியிருக்கிறார்கள். இதைச் செய்தால் நீங்கள் கடவுளைப் பார்ப்பீர்கள் என்று கூறினார்கள். இது கடவுளைப் பார்ப்பது பற்றி இல்லை.

உங்களது கைகளில், நரம்புமுனைகளின் ஒரு கனமான திரட்சி உள்ளது. உங்களுடைய உள்ளங்கைகளை சேர்த்துத் தேய்க்கும்போது, எல்லா நரம்புமுனைகளும் செயல்படுத்தப்பட்டு, உங்களது உடல் உடனடியாக விழிப்புநிலைக்கு வருகிறது. நீங்கள் காலையில் எழுந்தபின்பும் உறக்கம் கலையாமலும், சோம்பலாகவும் உணர்ந்தீர்கள் என்றால், இதை மட்டும் செய்து, பிறகு பாருங்கள், எல்லாமே விழிப்புநிலைக்கு வரும். உங்கள் கண்கள் மற்றும் புலன்களின் மற்ற அம்சங்களுடனும் தொடர்புடைய எல்லா நரம்புகளும் விழிப்படைகிறது. உங்கள் உடலை நீங்கள் அசைப்பதற்கு முன், உங்கள் உடலும், மூளையும் சுறுசுறுப்பாக இருக்கவேண்டும். நீங்கள் மந்தமாக எழுந்திருக்கக்கூடாது, அதுதான் நோக்கம்.

Trending News

Latest News

You May Like