1. Home
  2. தமிழ்நாடு

மீண்டும் அரங்கேறிய சோகம்..!!உயிரை பறித்த ஆன்லைன் ரம்மி..!

Q

சென்னை சைதாப்பேட்டை சின்னமலை 2வது தெருவைச் சேர்ந்த ஆகாஷ் (வயது 28). இவர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்திருந்தார். இவரது தந்தை காலமாகிவிட்டார். இதனால் ஆகாஷ் தனது தாயுடன் வசித்து வந்தார்.
ஆகாஷின் தாயும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் புற்றுநோய் தொடர்பான சிகிச்சை என்பது அளிக்கப்பட வேண்டி உள்ளது. இதற்கு அதிக பணம் தேவைப்படும் சூழலில் ஆகாசுக்கு சரியான வேலையும் இல்லை.
கேட்டரிங் வேலைக்குச் சென்று வந்த ஆகாசுக்கு போதிய சம்பளம் என்பது கிடைக்கவில்லை. இதனால் அவர் மனவருத்தம் அடைந்துள்ளார். இதற்கிடையே தான் அதிகப்பட்டியான பணம் சம்பாதிக்க அவர் ஆன்லைன் ரம்மி விளையாடத் தொடங்கி உள்ளார். முதலில் அவருக்கு ஆன்லைன் ரம்மியிலிருந்து பணம் கிடைத்துள்ளது.
இதனால் ஆகாஷ் ஆன்லைன் ரம்மியில் தொடர்ந்து விளையாடியுள்ளார். அவரது தாயின் சிகிச்சைக்கு வைத்திருந்த ரூ.30 ஆயிரம் பணத்தை வைத்தும் அவர் விளையாடி உள்ளார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவருக்குப் பணம் கிடைக்கவில்லை. தாயின் சிகிச்சைக்கு வைத்திருந்த ரூ.30 ஆயிரத்தை இழந்துள்ளார்.
இதனால் மனவருத்தம் அடைந்த ஆகாஷ் நேற்று தனது வீட்டு மாடியில் உள்ள அறைக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுபற்றிக் கோட்டூர்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக ஆகாசின் தாய் கண்ணீர் மல்க அரசுக்குக் கோரிக்கை வைத்தார். ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‛‛என் மகன் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பைப் படித்தார். கேட்டரிங் வேலைக்குச் சென்று வந்தார். சமீபத்தில் அவர் ஆன்லைனில் ரம்மி விளையாடி உள்ளார். முதலில் பணம் வந்ததால் என் சிகிச்சைக்கான ரூ.30 ஆயிரத்தையும் வைத்து விளையாடி உள்ளார். ஆனால் மீண்டும் அவருக்குப் பணம் கிடைக்கவில்லை.
வங்கி கணக்கில் பணம் குறைந்தது பற்றி நான் என் மகனிடம் கேட்டேன். அதற்கு விரைவில் வந்துவிடும் அம்மா என்று கூறினான். ஆனால் பணம் வரவில்லை. இதனால் தற்கொலை செய்து உள்ளான். இது போன்ற விளையாட்டுகளால் நடுத்தர குடும்பங்கள் அதிகம் பாதிக்கப்படுகிறது.
என் மகன் தான் கடைசியாக இறந்ததாக இருக்க வேண்டும். இதனால் ஆன்லைன் கேம் விளையாட்டுகளை அரசுத் தடை செய்ய வேண்டும். இதுதொடர்பாக அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும். ஏனென்றால் வாலிபர்கள் ஆன்லைன் ரம்மியால் கெட்டுப்போகிறார்கள். எங்கேயோ ஒருவர் இறப்பதாக நான் நினைக்கிறோம். ஆனால் குடும்பத்தில் ஒருவர் தற்கொலை செய்யும்போது தான் அந்த இழப்பு பெரிதாக இருக்கிறது” என்று கண்ணீர் மல்கக் கூறினார்.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. இதற்குப் பலர் ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து தற்கொலை செய்வது தான் காரணம். சமீபத்தில் தமிழக ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கேச்சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு அளித்த பரிந்துரைகளின்படி தமிழ்நாட்டில்ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசரச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து சட்டம் அமலுக்கு வந்தது.
ஆனால் இந்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் தடைக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழ்நாடு சூதாட்ட தடை சட்டத்தில் ரம்மி, போக்கர் ஆன்லைன் விளையாட்டுகளை அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டு என்றுகூறி தடை விதித்து தமிழக அரசு இயற்றிய சட்டப் பிரிவுகளை ரத்து செய்தது. இந்த விளையாட்டுகளை விளையாடுவதற்கான வயது, நேரம் ஆகியவற்றை முறைப்படுத்தும் வகையில் அரசு புதிதாக விதிகளை உருவாக்கிக் கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பதில் சிக்கல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like