சோகம்..! உலகின் மிக வயதான நாய் உயிரிழப்பு!
போர்ச்சுகல் நாட்டில் உலகின் மிக வயதான நாய் உயிரிழந்தது. கடந்த 1992- ஆம் ஆண்டு மே 11- ஆம் தேதி பிறந்த அந்த நாய்க்கு வயது 31.
போர்ச்சுகல்லில் பாபி (Bobi) என்ற அந்த செல்லப் பிராணிக்கு நல்ல உணவும், தூயக் காற்றும், அதிகப் படியான அன்பும் வழங்கி வந்ததாக அதனை வளர்த்து வந்த லியோனல் கோஸ்டா (Leonel Costa) என்பவர் தெரிவித்தார். போர்ச்சுக்கல் நாட்டின் கான்கியுர்ஸ் (Conqueiros) கிராமத்தில் தனது 8 வயதில் பாபியை எடுத்து வளர்க்கத் தொடங்கியதாகக் கூறி, லியோனல் கோஸ்டா வீட்டில் தாங்கள் சாப்பிடும் உணவுகளை பாபிக்கும் அளித்து வந்ததாகக் கூறினார்.
இதற்கு முன் கடந்த 1939- ஆம் ஆண்டில் உயிரிழந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 29 வயது நாய் தான், உலகின் மிக வயதான நாய் என்று கின்னஸ் சாதனை படைத்திருந்ததாகவும், அதை பாபி முறியடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிக வயதான நாய் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்துவதாக கின்னஸ் உலக சாதனை அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.