சோகம்..! 18 கி.மீ தூரத்துக்கு அம்மாவின் உடலை சைக்கிளின் வைத்து கொண்டு சென்ற மகன்..!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ளது வடக்கு மீனவன்குளம்.. இங்கு வசித்து வருகிறார் 65 வயதான சிவகாமியம்மாள்.. இவருக்கு 3 மகன்கள் இருக்கிறார்கள்.. இதில் 2வது மகன் இறந்துவிட்டார். மூத்த மகன் குடும்பத்துடன் தனியே வசித்து வர, 3வது மகன் பாலன் என்பவர்தான், சிவகாசியம்மாளை கவனித்து வருகிறார்..
சிவகாமிக்கு தீவிர மன சிதைவு நோய் இருந்து வந்த நிலையில், நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.. இதனிடையே, விபத்து ஒன்றில் பாலன் சிக்கி, தலையில் அடிபட்டு, மனநலமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும். 65 வயதான தன்னுடைய தாயை சாப்பிட வைப்பது, இயற்கை உபாதைகள் கழிக்க வைப்பது என அனைத்தையும் கவனித்து வந்துள்ளார். இப்படிப்பட்ட சூழலில், கடந்த சில நாட்களுக்கு, சிவகாமியம்மாள் உடல்நலம் குன்றி நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவரது நிலைமை சீரியஸாகிவிடவும், வேறு யாரையாவது உடனடியாக அழைத்து வரும்படி பாலனிடம் மருத்துவமனையில் சொல்லியிருக்கிறார்கள்.. ஆனால், யாரையுமே பாலனால் அழைக்க முடியவில்லை.
தன்னுடைய அம்மாவை வீட்டுக்கே அழைத்து செல்வதாக கூறிவிட்டு, சிவகாமியம்மாளை நேற்று காலை 11 மணிக்கு மருத்துவமனையிலிருந்து வெளியே அழைத்து வந்துள்ளார் பாலன்.. மருத்துவமனை எதிரிலிருந்த கோவில் வளாகத்தில் காபி வாங்கி அம்மாவுக்கு தந்துள்ளார். ஆனால், சிவகாமியம்மாவால் அதை குடிக்க முடியவில்லை.. சிறிது நேரத்தில் இறந்துவிட்டார்.
இதனால் சடலத்தை என்ன செய்வதென்று தெரியாமல் பாலன் விழித்துள்ளார்.. பிறகு, மாலையில் சைக்கிளில் தாயின் சடலத்தை கட்டி, உருட்டியபடியே ஊருக்கு எடுத்துச்சென்றுள்ளார். பாலனின் குடும்பம் மிகவும் ஏழ்மையானது.. மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதால் பாலனுக்கு யாரையுமே தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.. மருத்துவமனையிலிருந்து 18 கிலோமீட்டர் தூரத்துக்கு, அம்மாவின் உடலை சைக்கிளின் பின் புறம் கேரியரில் வைத்து கட்டி, உருட்டியபடியே சென்றதை, பொதுமக்கள் அதிர்ச்சியில் கலங்கி பார்த்துள்ளனர். நாங்குநேரிக்கு முன்னதாக மூன்றடைப்பு பகுதியில் இரவு 10 மணிக்கு சடலத்துடன் பாலன் சென்றுகொண்டிருந்தபோது, சிலர் இதுகுறித்து போலீசுக்கு சொல்லி உள்ளார்கள். இதையடுத்து, போலீசார் விரைந்து வந்து, பாலனின் சைக்கிளில் அவரது தாய் இறந்திருப்பதை உறுதி செய்து, அதற்கு பிறகு ஆம்புலன்ஸ் மூலம் மீண்டும் திருநெல்வேலி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்... இன்று போஸ்ட் மார்ட்டம் முடிந்த நிலையில், பாலன், அவரது அண்ணன் சவரிமுத்துவிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.