சோகம்..! வேதாரண்யம் அருகே தனியார் பட்டாசு தொழிற்சாலையில் விபத்து : ஒருவர் உயிரிழப்பு..!
நாகை வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஆஞ்சனேயா பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.இந்த ஆலையில் நேற்று மாலை மணி அளவில் வான வெடி தயாரிக்கும் பணி நடைபெற்று வந்த போது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டு வெடிகள் வெடித்து சிதறியதில் இரண்டு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது.
இந்த கட்டிடத்தில் பணியாற்றி வந்த தொழிற் சாலையின் உரிமையாளர் கஜேந்திரன் என்பவரின் தகப்பனார் சுப்பிரமணியன் என்பவர் படுகாயம் அடைந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்த மேரி சித்ரா, கலாவதி, கண்ணன் ஆகிய 3 பேரும் வெடி விபத்தில் படுகாயம் அடைந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த இரண்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் கலாவதி மட்டும் வேதாரணியத்தில் சிகிச்சை பெறுகிறார்.
தகவலறிந்து வந்த வேதாரண்யம், வாய்மேடு பகுதியிலிருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் இருக்க நீண்ட நேரம் போராடி தண்ணீரை பீச்சி அடித்து வெடி விபத்தை தடுத்தனர். இந்த பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வாய்மேடு போலீசார் வந்து வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த பட்டாசு தொழிற்சாலை ஆனது கஜேந்திரன் என்பவரின் பெயரில் அனுமதி பெற்று இயங்கி வருகிறது. இந்த விபத்தில் கஜேந்திரனின் தகப்பனார் சுப்பிரமணியன் பலியானார் என்பது குறிப்பிடதக்கது. இதுகுறித்து காவல் துறையினர் கஜேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.