சோகம்..! இரு வாரங்களில் 50க்கும் மேற்பட்ட யாத்ரிகர்கள் உயிரிழப்பு..!
சார்தம் யாத்திரை மே 10ஆம் தேதி தொடங்கியது முதல் இதுவரை 50க்கும் மேற்பட்ட யாத்ரிகர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து கர்வால் ஆணையர் வினய் சங்கர் பாண்டே செய்தியாளர்களிடம் கூறுகையில், “இதுவரை 52 சார்தம் யாத்ரிகர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.
“கங்கோத்ரியில் மூன்று பக்தர்களும் யமுனோத்ரியில் 12 பேரும் பத்ரிநாத்தில் 14 பேரும் கேதார்நாத்தில் 23 பக்தர்களும் உயிரிழந்தனர்.
“50 வயதுக்கு மேற்பட்ட பக்தர்களுக்கு மருத்துவப் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
“இமயமலைக் கோயில்களுக்குச் செல்லும் வழியில் மருத்துவச் சோதனைகள் செய்யப்படுகின்றன. யாத்ரிகர்களுக்கு உடல்நலம் சரியில்லை என்றால் பயணம் செய்யவேண்டாம் என்று அறிவுறுத்தப் படுகிறார்கள்,” என்றார்.
இருப்பினும், உடல்நலனைப் பொருட்படுத்தாமல் யாத்திரையைத் தொடர விரும்பினால், ஒரு படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுத் பின்னர் அவர்கள் பயணத்தைத் தொடர அனுமதிக்கப்படுகிறார்கள்.
இதுவரை ஒன்பது லட்சத்து 67 ஆயிரத்து 302 பக்தர்கள் சார்தம் தரிசனம் செய்துள்ளனர் என்றும் பாண்டே மேலும் கூறினார்.