பதவிநீக்கம் செய்யப்பட்ட ரஷிய மந்திரி சில மணி நேரத்தில் தற்கொலை..!
2024-ம் ஆண்டு மே மாதம் ரஷியாவின் போக்குவரத்து துறை மந்திரியாக ரோமன் ஸ்டாரோவிட் பதவியேற்றார்.
இந்த நிலையில், ரோமன் ஸ்டாரோவிட்டை திடீரென பதவிநீக்கம் செய்து ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டார். அவரது பதவிநீக்கத்திற்கான காரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதே சமயம், நோவ்கொரோட் பகுதியின் முன்னாள் கவர்னர் ஆண்ட்ரெய் நிகிடின் அடுத்த போக்குவரத்து துறை மந்திரியாக அறிவிக்கப்பட்டார். இது குறித்து ரஷிய அரசின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், "ஆண்ட்ரெய் நிகிடினின் அனுபவமும், தகுதியும் போக்குவரத்து துறையை மேம்படுத்த உதவும் என்று அதிபர் புதின் நம்புகிறார்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், பதவிநீக்கம் செய்யப்பட்ட சில மணி நேரத்தில் ரோமன் ஸ்டாரோவிட் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாஸ்கோ புறநகர் பகுதியில் தனது காரில் இருந்தபடி ரோமன் ஸ்டாரோவிட் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என ரஷிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.