நாளை இரவு 10:00 மணி வரை மட்டுமே சபரிமலையில் தரிசனம்..!

டிச.,31-ல் தொடங்கிய நெய்யபிஷேகம் இன்று(ஜன.,18) காலை 10:30 மணிக்கு நிறைவு பெறும். தொடர்ந்து களபாபிஷேகம் நடைபெறும். நாளை இரவு 10:00 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு தரிசனம் உண்டு. நாளை மாலை 6:00 மணி வரை மட்டுமே பம்பையில் இருந்து பக்தர்கள் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
ஜன., 20 அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின்னர் கணபதி ஹோமம் நடைபெறும். தொடர்ந்து பந்தளம் மன்னர் பிரதிநிதி ராஜராஜ வர்மா ஐயப்பனை தரிசனம் செய்வார். மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி மன்னர் பிரதிநிதி முன்னிலையில் ஐயப்பனை யோக நிலையில் அமர்த்தி நடை அடைத்து 18 படிகளுக்கு கீழே வருவார்.
அங்கு கோயிலுக்கான சாவி, வருமானம் என்று கூறி பண முடிப்பும் மன்னர் பிரதிநிதியிடம் மேல் சாந்தி வழங்குவார். அவர் அவற்றை கோயில் நிர்வாக அதிகாரியிடம் கொடுத்து வரும் காலங்களிலும் பூஜைகள் தவறாமல் நடத்த வேண்டும் என்று கூறி திருவாபரணங்களுடன் புறப்பட்டு செல்வார்.