மீண்டும்... மீண்டுமா ? நீட் வினாத்தாள் ரூ.70,000க்கு விற்பனை..!
நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மருத்துவப் பட்ட மேற்படிப்புகளான எம்.டி, எம்.எஸ், முதுநிலை டிப்ளமா படிப்புகளுக்கான இடங்கள், நீட் முதுநிலை தேர்வு (NEET PG) மூலமாக நிரப்பப்படுகின்றன. இந்தத் தேர்வை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் நடத்துகிறது.
எம்.டி, எம்.எஸ், முதுநிலை டிப்ளமா படிப்புகளுக்கு 2024 - 2025 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு குறித்த அறிவிப்பை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 259 நகரங்களில் ஜூன் 23 ஆம் தேதி நடைபெற இருந்தது.
ஆனால், தேர்வு நடைபெறுவதற்கு முந்தைய நாள் இரவு திடீரென நீட் - முதுநிலை தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டது. நீட் இளநிலை தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள், சர்ச்சைகள் காரணமாக நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, ஒத்திவைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11ல் நடைபெறும் என தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் அறிவித்தது. வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி அன்று நீட் முதுநிலை தேர்வு, காலை, மதியம் என இரண்டு ஷிப்ட்களாக நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை 2 லட்சத்துக்கும் அதிகமான மருத்துவ மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
இந்நிலையில், முதுநிலை நீட் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக சர்ச்சை கிளம்பியுள்ளது. 'NEET PG Leaked Materials' என்ற பெயரில் டெலிகிராம் சேனல் செயல்படுவதாகவும், ரூபாய் 70,000 வரை வினாத்தாளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.
அந்த டெலிகிராம் குழுவில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. உண்மையிலேயே நீட் முதுநிலை வினாத்தாள் கசியவிடப்பட்டு உள்ளதா, அல்லது ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கத்தோடு மர்ம கும்பல் போலியாக வினாத்தாளை பரப்பி வருகிறதா என விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.