ரஞ்சிக் கோப்பையில் மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக ருதுராஷ் கெய்க்வாட் தேர்வு!
ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்தியா - ஜிம்பாப்வே தொடரில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இலங்கை தொடரில் வாய்ப்புக்கு கிடைக்காதது மிகப்பெரிய பேசு பொருள் ஆனது. மூத்த வீரர்களும் பயிற்சியாளர்களும் வீரர் தேர்வு செய்யும் ஆணையத்தின் மீது தங்கள் ஆதங்கத்தை கொட்டினர்.
எனினும், தற்போது ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பெரிய பொறுப்பு கிடைத்துள்ளது. மகாராஷ்டிர கிரிக்கெட் அணி 2024-2025 ஆம் ஆண்டுக்கான ரஞ்சி டிராபி அணியின் கேப்டனாக ருதுராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹராரேயில் ஜிம்பாப்வேக்கு எதிராக கெய்க்வாட் சிறப்பாக செயல்பட்டார். அவர் ஒரு போட்டியில் ஆட்டமிழக்காமல் 77 ரன்கள் எடுத்திருந்தார். மேலும், அவர் ஒருப்போட்டியில் 49 ரன்கள் எடுத்தார். ருதுராஜ் கெய்க்வாட் இந்தியாவுக்காக 23 டி20 போட்டிகளில் விளையாடி 633 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 6 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
ருதுராஜ் கெய்க்வாட் மகாராஷ்டிர அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடி வருகிறார். ருதுராஜ் 29 முதல் தர போட்டிகளில் 2041 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 6 சதங்கள், 10 அரைசதங்கள் அடித்துள்ளார். 77 லிஸ்ட் ஏ போட்டிகளில் 4130 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 15 சதங்கள், 17 அரை சதங்கள் மற்றும் இரட்டைச்சதமும் அடங்கும்.
மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கம் ரஞ்சி டிராபிக்கான அணியை அறிவித்துள்ளது. அதில், அர்ஷின் குல்கர்னி, ராகுல் திரிபாதி, சச்சின் தாஸ், சித்தேஷ் வீர், நிகில் நாயக், அங்கித் பாவ்னே, திக்விஜய் பாட்டீல், சவுரப் நாவலே, மந்தர் பண்டாரி, ஹிதேஷ் வாலுஞ்ச், விக்கி ஓட்ஸ்வால், சத்யஜித் பச்சாவ் ஆகியோரும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
ரஞ்சிக் கோப்பையில் மகாராஷ்டிரத்தின் முதல் போட்டி ஜம்மு-காஷ்மீருக்கு எதிராக அக்டோபர் 11ஆம் தேதி தொடங்குகிறது