1. Home
  2. தமிழ்நாடு

வினோத அட்வைஸை கொடுத்த ரஷ்ய அதிபர்..! உணவு மற்றும் இடைவெளியின் போது உடலுறவு கொள்ள வேண்டும்

1

உலகின் பல்வேறு நாடுகளிலும் மக்கள் தொகை சரிவது மிக பெரிய பிரச்சினையாக இருக்கிறது. ஜப்பான், தென் கொரியா நாடுகளில் மக்கள் தொகை தொடர்ந்து சரிந்தே வருகிறது. அப்படி மக்கள் தொகை குறைந்து வருவதால் மிகப் பெரிய பிரச்சினையை எதிர்கொள்ளும் நாடாக ரஷ்யா இருக்கிறது. அங்குக் கடந்த பல ஆண்டுகளாகவே மக்கள் தொகை தொடர்ந்து குறைந்தே வருகிறது. இதனால் இப்போது பெரிய பிரச்சினை இல்லை என்றாலும் வரும் காலத்தில் இது மிகப் பூதாகரமாக வெடிக்கும் ஆபத்து இருக்கிறது. இதற்கிடையே ரஷ்யா அதிபர் புதின் இந்த விவகாரத்தில் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை எதிர்த்துப் போராடும் முயற்சியாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வினோதமான கோரிக்கையை விடுத்துள்ளார். அதாவது வேலை செய்யும் இடத்தில், மதிய உணவு மற்றும் காபி இடைவேளையின் போது உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு புதின் கோரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யாவின் மக்கள் தொகை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், இப்போது கருத்தரிப்பு விகிதம் 1.5ஆக உள்ளது. அதேநேரம் ரஷ்ய நாட்டின் மக்கள்தொகை நிலைத்தன்மைக்குப் பிறப்பு விகிதம் குறைந்தபட்சம் 2.1ஆக இருக்க வேண்டும். இத்துடன் ரஷ்யா உக்ரைன் போர் காரணமாகவும் பல லட்சம் பேர் உயிர் ஆபத்தில் உள்ளது. இதனால் ரஷ்யாவில் மக்கள் தொகை விவகாரம் மிகப் பெரிய பிரச்சினையாக வெடிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே புதின் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இது குறித்து ரஷ்யாவின் சுகாதார அமைச்சர் டாக்டர் யெவ்ஜெனி ஷெஸ்டோபலோவ் கூறுகையில், “மக்கள் தொகையை வளர்த்தெடுப்பது முக்கியமானது. இதற்கு வேலை ஒரு தடையாக இருக்கக்கூடாது.. குடும்ப விரிவாக்கத்திற்கு மதிய உணவு மற்றும் காபி இடைவேளையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வேலையில் மிகவும் பிஸியாக இருப்பதால் குழந்தையைத் தள்ளிப் போடுகிறோம் எனச் சொல்வதை எல்லாம் ஏற்க முடியாது. வேலை செய்யும் போது இடைவெளியில் கூட இதை நீங்கள் செய்யலாம். இதை எல்லாம் தள்ளிப் போடக்கூடாது. வாழ்க்கை மிக விரைவாகச் செல்லும் ஒன்று. எனவே நாம் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பிரேக் நேரத்தைப் பயன்படுத்தி குழந்தைகளை உருவாக்குங்கள்” என்று அவர் கூறினார்.

ரஷ்யாவின் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 18 முதல் 40 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு இதற்காகப் பல இலவச சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், ரஷ்யாவின் செல்யாபின்ஸ்க் பகுதியில், பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஊக்கத்தொகையை அறிவிக்கப்பட்டுள்ளது.. 24 வயதான பெண்களுக்கு முதல் குழந்தை பிறந்தவுடன் 1.02 லட்சம் ரூபிள் (ரூ 9.40 லட்சம்) வழங்கப்படுகிறது. அதேபோல கருக்கலைப்பு செய்வதும் கடினமாக்கப்பட்டுள்ளது. மேலும், விவாகரத்துக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தாண்டு முதல் ஆறு மாதங்களில் ரஷ்யாவில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குழந்தை பிறப்பு சரிந்துள்ளது. கடந்த ஜூன் வரை ரஷ்யாவில் 5,99,600 குழந்தைகள் பிறந்துள்ளன. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட 16,000 குறைவாகும். குழந்தை பிறப்பு விகிதம் இதேபோல தொடர்ந்து குறைந்து வந்தால் அது பேரழிவாக இருக்கும் என்பதால் அதை அதிகரிக்க வேண்டும் என அந்நாட்டுத் தலைவர்கள் எச்சரிக்கிறார்கள்.

Trending News

Latest News

You May Like