1. Home
  2. தமிழ்நாடு

இந்தியா மீது ரஷ்யா கடும் கோபத்தில் உள்ளது..!

Q

உக்ரைன் நாட்டிற்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த பல மாதங்களாகவே மோதல் நிலவி வருகிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே இந்திய ஆயுத நிறுவனங்கள் ஐரோப்பாவுக்கு விற்ற சில ஆயுதங்கள், குறிப்பாகப் பீரங்கி குண்டுகள், உக்ரைனுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா கோபம்: இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தியபோதிலும், இந்தியா இந்த விவகாரத்தில் அமைதி காத்து வந்தது. இதற்கிடையே இப்போது இந்த ஆயுதங்கள் உக்ரைனுக்கு சென்றுள்ளதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது..
இது ரஷ்யாவுக்கு எதிராகப் போரில் பயன்படுத்தப்படலாம் என்பதால் இந்தியா மீது ரஷ்யா கடும் கோபத்தில் உள்ளது. ரஷ்யா தாக்குதலிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்களை வழங்கி வருகின்றன. கடந்த ஓராண்டாகவே இதை அவர்கள் செய்து வரும் போதிலும், இந்திய ஆயுதங்களை அனுப்பி உள்ளதே பேசுபொருள் ஆகியுள்ளது.
 அதேநேரம் ஒரு நாடு ஆயுதங்களை வாங்கினால் அந்தக் குறிப்பிட்ட நாடு மட்டுமே அந்த ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டும்.. மற்றவர்களுக்கு விற்பனை செய்யக் கூடாது என்று இந்திய ஆயுத ஏற்றுமதி விதிமுறைகள் தெளிவாக இருக்கும் போதிலும், அதை மீறி ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பியுள்ளது. அதைச் சுட்டிக்காட்டியே ரஷ்யா தனது அதிருப்தியைப் பதிவு செய்துள்ளது. கடந்த சில மாதங்களில் மட்டும் குறைந்தபட்சம் 2 முறை அதிருப்தியைக் காட்டியுள்ளது. ரஷ்யா வெளியுறவுத் துறை அமைச்சகமும் மற்றும் இந்தியா பாதுகாப்பு அமைச்சகமும் இந்த விவகாரத்தில் அதிகாரப்பூர்வமாகக் கருத்து கூறவில்லை. கடந்த ஜனவரி மாதம் இது தொடர்பான கேள்விக்கு உக்ரைனுக்கு பீரங்கி குண்டுகளை நேரடியாக அனுப்பவில்லை என்று மட்டும் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பதிலளித்தார்.
அதேநேரம் மிகப் பெரியளவில் எல்லாம் இந்திய ஆயுதங்கள் உக்ரைனுக்கு செல்லவில்லையாம். இப்போது உக்ரைன் இறக்குமதி செய்யும் ஆயுதங்களில் இது 1%க்கும் குறைவாகவே இருக்கிறதாம். மேலும், இந்த வெடிமருந்துகள் விற்கப்பட்டதா அல்லது நன்கொடையாக வழங்கப்பட்டதா என்பது குறித்த தகவல்கள் இல்லை. உக்ரைனுக்கு அனுப்பப்பட்டுள்ள வெடிமருந்துகள் பெரும்பாலும் இத்தாலி மற்றும் செக் குடியரசு நாடுகளில் இருந்தே சென்றிருக்கலாமெனக் கூறப்படுகிறது. இந்த நிலைகுறித்து இந்தியா உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக இந்திய அதிகாரி கூறினார். அதேநேரம் இதை நிறுத்தவோ அல்லது இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவோ இந்தியா எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றே அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இந்த விவகாரம்குறித்து உக்ரைன், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் செக் குடியரசு பாதுகாப்பு அமைச்சகங்களும் கருத்து கூற மறுத்துவிட்டன. வெளியான தகவல்: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட குண்டுகளை முதன்மையாக இத்தாலியின் மெக்கனிகா பெர் எல்’எலெட்ரோனிகா இ சர்வோமெக்கனிஸ்மி என்ற நிறுவனம் தான் உக்ரைனுக்கு அதிகளவில் அனுப்புகிறதாம். இந்த நிறுவனம் இந்தியாவிலிருந்து காலி குண்டுகளை வாங்கி வெடிமருந்துகளை நிரப்பும். இப்போது அதை அவர்கள் உக்ரைனுக்கு அனுப்பி வருவதாகக் கூறப்படுகிறது. அதேநேரம் ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்திகள் மட்டுமே. இதை இந்தியா, ரஷ்யா உட்பட எந்தவொரு நாடும் அதிகாரப்பூர்வமாக ஏற்கவும் இல்லை.. மறுக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like