அஜர்பைஜான் விமான விபத்திற்கு ரஷ்யாவே காரணம் - பரபரப்பு குற்றச்சாட்டு..!
டிச.25ஆம் தேதி அஜர்பைஜானின் பாகுவில் இருந்து 72 பேருடன் ரஷ்யாவின் க்ரோஸ்னிக்கு சென்ற பயணிகள் விமானம், கஜகஸ்தானின் அக்டாவ் நகருக்கு அருகே தரையிரங்க முயற்சித்த போது வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 38 பேர் உயிரிழந்தனர் மற்றும் 29 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம், உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் விமான விபத்திற்கு தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருக்கக்கூடும் என எதிர்பார்த்த நிலையில், தரவுகளின் அடிப்படையில் பயணிகள் விமானத்தை, ரஷ்ய ஏவுகணைகள் தாக்கியதே காரணம் என்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து விபத்திற்கு தாங்கள்தான் காரணம் என நேரடியாக கூறாமல், அஜர்பைஜானிடம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மன்னிப்புக் கோரினார்.
அதாவது பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகும் முன் க்ரோஸ்னியில் தரையிறங்க முயன்றபோது, ரஷ்ய விமானப்படை அங்கு பயிற்சியில் ஈடுபட்டதாக புதின் ஒப்புக்கொண்டார். ஆனால் ரஷ்ய ஏவுகணைதான் அஜர்பைஜான் விமானத்தை சுட்டது என்பதை அவர் ஒப்புக்கொள்ளவில்லை.
இந்நிலையில் ரஷ்யா குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் தெரிவித்துள்ளார். விபத்துக்கான உண்மை காரணத்தை மூடி மறைக்க ரஷ்யா முயற்சித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். “குற்றத்தை ஒப்புக்கொள்வது, நட்பு நாடாகக் கருதப்படும் அஜர்பைஜானிடம் உரிய நேரத்தில் மன்னிப்பு கேட்பது, இதைப் பற்றி பொதுமக்களுக்குத் தெரியப்படுத்துவது — இவை அனைத்தும் ரஷ்யா எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்” என அவர் தெரிவித்துள்ளார்.
விமானம் க்ரோஸ்னி பகுதிக்கு வருவதற்கு முன்பு, ரஷ்யாவின் க்ரோஸ்னி, விளாடிகாவ்காஸ், மொஸ்டோக் ஆகிய பகுதிகளில் உக்ரைன் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இதனால் ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அப்பகுதிகளில் செயல்பாட்டில் இருந்தன. அந்த சமயத்தில் அஜர்பைஜான் பயணிகள் விமானம் வந்ததால் வான் பாதுகாப்பு ஏவுகணைகள் தவறுதலாக அந்த விமானத்தை தாக்கி உள்ளன.