தங்க புதையல் இருப்பதாக பரவிய வதந்தி..! கோவில் சுவரை உடைத்த மர்ம கும்பல்..!

வேலூரை அடுத்த அரியூர் சிவநாதபுரம் பகுதியில் சுமார் 5 ஆயிரம் அடி உயரம் கொண்ட மலை அமைந்துள்ளது. இந்த மலையின் உச்சியில் பழமை வாய்ந்த ஆதிகைலாசநாதர் சிவன் கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவில் அருகே உள்ள மலைப்பகுதியில் புதையல் இருப்பதாக அந்த பகுதி மக்களிடையே நீண்ட காலமாக நம்பிக்கை உள்ளது.
இந்த நிலையில் சிவநாதபுரம் ஆதிகைலாசநாதர் சிவன் மலைக் கோவில் சுற்றுச்சுவரில் உள்ள கற்களை மர்மகும்பல் நேற்று உடைத்துள்ளது. இதனை மலைப்பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற சிலர் கண்டு சத்தம் போட்டுள்ளனர். அத்துடன் உடனடியாக சிவநாதபுரம் பகுதி மக்களிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்கள் வேகமாக மலை உச்சிக்கு சென்று பார்த்தனர். அங்கு கோவில் சுற்றுச்சுவரை 10-க்கும் மேற்பட்டோர் கடப்பாரை, மண்வெட்டி உள்ளிட்ட பொருட்களால் உடைத்து கொண்டிருந்திருக்கிறார்கள். கோவில் அருகே கூடாரம் அமைக்கப்பட்டும் இருந்திருக்கிறதாம். அதன் உள்ளே சமையலுக்கு தேவையான பொருட்கள், கட்டுமான பணிக்கு பயன்படுத்தும் உபகரணங்கள் இருந்தன. மேலும் மலையின் பல்வேறு இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த 3 பேரும் இது தொடர்பாக மர்ம கும்பலிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதாக கூறப்படுகிறது. அவர்களின் ஊர், விவரம் பற்றி இளைஞர்கள் கேட்டனர். அதற்கு தாங்கள் அனைவரும் சேலம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் என்றும், அணைக்கட்டு தாலுகா கந்தனேரியை சேர்ந்த ஒருவர் கூறியதன் பேரில் மலையில் தங்கியிருந்து சமைத்து வேலை செய்ததாக கூறியிருக்கிறார்கள்.
இளைஞர்கள் கேள்வி எழுப்பியபின்னர், அனைவரும் தங்களின் உடைமைகள், கடப்பாரை, மண்வெட்டி உள்ளிட்ட பொருட்களை எடுத்து கொண்டு வேகமாக அங்கிருந்து சென்று விட்டனர். மர்ம கும்பலின் கைகளில் ஆயுதம் இருந்ததால், இளைஞர்களால் அவர்களை பிடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சிவநாதபுரம் மலையில் தங்கியிருந்த மர்மகும்பல் யார்?, அவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள். மர்மகும்பல் மலையில் பள்ளம் தோண்டி தங்க புதையல் தேடினார்களா? அல்லது பழங்கால சிலைகள் கடத்துவதற்கு மலையில் தங்கினார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.