ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. மீது செருப்பு வீச்சு! வெள்ளச் சேதத்தைப் பார்வையிட சென்றபோது நிகழ்ந்த பரிதாபம்!

ஒரு பக்கம் இயற்கை கடவுளின் தேசத்தில் கோரத்தாண்டவமாடியதைப் போலவே இப்போது தெலுங்கானாவில் ருத்ர தாண்டவமாடுகிறது. கடந்த சில தினங்களாகவே தெலுங்கானாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
தெலுங்கானாவின் பல மாவட்டங்களில் ஏராளமானோர் வீடுகளை இழந்து வெள்ளத்தில் தத்தளிக்கின்றனர். இதுவரையில் இந்த மழைக்கு 50க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். வெள்ளச் சேதம் ரூ.5,000 கோடி வரையில் இழப்பு என்று அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஆளும்கட்சியான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் இப்ராஹிம்பட்டணம் தொகுதி எம்.எல்.ஏ. மன்சிரெட்டி, ரங்கா ரெட்டி மாவட்டத்தில் வெள்ள சேதங்களை ஆய்வு செய்வதற்காக நேற்று சென்றிருந்தார். அவரை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் திடீரென முற்றுகையிட்டனர். இதுவரையில் தங்களுக்கு நிவாரண உதவிகள் எதுவுமே கிடைக்கவில்லை என எம்.எல்.ஏ.வுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். அப்போது அவருடைய வாகனத்தை சேதப்படுத்தியதோடு, அவர் மீது செருப்பையும் வீசி எறிந்தனர். இதனையடுத்து, அங்கிருந்த காவல்துறையினர், பொதுமக்கள் மீது தடியடி நடத்திக் கலைத்தனர்.