1. Home
  2. தமிழ்நாடு

ஒரு கையை இழந்த ஒன்றரை வயது குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும்..!

1

ஒரு கையை இழந்த ஒன்றரை வயது குழந்தை முகமது மகிருக்கு இனியாவது முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும்; எதிர்காலத்தை இழந்த சிறுவனின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும்; தவறிழைத்த மருத்துவப் பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்தகீர்-அஜிஸா தம்பதியினரின் ஒன்றரை வயது குழந்தை முகமது மகிருக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உடல் நலம் தேறி வந்த நிலையில், 29.6.2023 அன்று குழந்தையின் வலது கையில் 'ட்ரிப்ஸ்' மூலம் மருந்து செலுத்தப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து தனது குழந்தையின் கை பாதிக்கப்பட்டதாகவும், இதுகுறித்து செவிலியர்களிடம் பலமுறை புகார் கூறியும் அவர்கள் அலட்சியப்படுத்தியதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நடந்த நிகழ்வுகளை, குழந்தை முகம்மது மகிரின் தாயார் அஜிஸா கூறும்போது 'அவங்க தப்பா போட்ட ஒரு ஊசியால் என் குழந்தை கையை எடுக்கணும்னு சொல்லிட்டாங்க. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியர்களின் அலட்சியத்தால்தான் என் குழந்தையின் கை அழுகியது; குழந்தையின் விரல் கருப்பாக மாறும்போதே செவிலியர்களிடம் பலமுறை சொன்னேன்; யாரும் கண்டுகொள்ளவில்லை; பலமுறை செவிலியர்களின் அலட்சியத்தால்தான் என்னுடைய குழந்தையின் கை போனது. என்னுடைய குழந்தைக்கு நடந்தது போல் எந்த குழந்தைக்கும் நடக்கக் கூடாது' என்று கண்ணீர் மல்க அழுதபடி புலம்பினார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்த மந்திரியின் செயல்பாடுகளால் புதிதாக ஒரு அரசு மருத்துவக் கல்லூரிகூட தமிழகத்திற்கு வரவில்லை. பழமை வாய்ந்த சென்னை ஸ்டேன்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய மூன்று மருத்துவக் கல்லூரிகளின் உட்கட்டமைப்பை சீரமைக்காத இந்த திமுக அரசின் அலட்சியத்தால், இந்த ஆண்டு 500 MBBS இடங்களை இழக்கும் கேவலம் ஏற்பட்டது.

அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் தட்டுப்பாடின்றி மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டன; உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன; மருத்துவ உபகரணங்கள், MRI ஸ்கேன் போன்ற அனைத்து உபகரணங்களும் பல கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டன. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் வாய்வீரம் பேசும் இந்த மந்திரி, என்ன காரணத்தினாலோ இதுவரை முறையாக மருந்துகளை, தமிழ் நாடு மருத்துவக் கழகத்தின் மூலம் கொள்முதல் செய்யாமல், உள்ளூர் கொள்முதல் மட்டுமே செய்வதாக செய்திகள் வருகின்றன.

இவ்வளவு பிரச்சனைகள் மருத்துவத் துறையில் கொழுந்துவிட்டு எரியும்போது, சுட்டிக் காட்டும் தவறுகளை, குறைகளை திருத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மந்திரி மா.சுப்பிரமணியத்திற்கு கிஞ்சித்தும் இல்லை. அதற்கு பதில், இவர் சம்பந்தா சம்பந்தமில்லாமல் பூசி மொழுகுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளார். துறை மீது கவனம் செலுத்தாத ஒரு நபர் சுகாதாரத் துறைக்கு மந்திரியாக இருப்பது தமிழக மக்களின் தலையெழுத்து.

திமுக ஆட்சியாளர்களின் அலட்சியத்தால், ஒரு கையை இழந்த ஒன்றரை வயது குழந்தை முகமது மகிருக்கு இனியாவது முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும்; எதிர்காலத்தை இழந்த சிறுவனின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும்; தவறிழைத்த மருத்துவப் பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். அரசு மருத்துவமனையையே நம்பி இருக்கும் அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடுவதை இந்த திமுக அரசு இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like