மகளிருக்கு மாதம் ரூ.1000... விண்ணபிக்க செல்போன் கட்டாயம்?

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் நிலையில், இதில் யாருக்கு உரிமை தொகை கிடைக்கும், எப்படி விண்ணப்பிப்பது, எந்த ஆவணங்கள் தேவை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை தமிழக அரசு அறிவித்தது. மகளிருக்கான இந்த உரிமைத் தொகையானது அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெறும் பெண்கள், 21 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.உச்ச வயது ஏதுமில்லை. சொந்தமாக கார் வைத்திருப்போர், ஆண்டு வருமானம் ரூபாய் 2 லட்சத்திற்கும் மேல் உள்ளோருக்கு ரூபாய் 1,000 கிடையாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ரேசன் கடை பணியாளர், வீடுகளுக்கே சென்று விண்ணப்பப் படிவத்தை வழங்க வேண்டும் எனவும், விண்ணப்பப் பதிவின் போது கடவுச்சொல் அனுப்பப்படும் என்பதால், தங்களது செல்போனையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தை அளிக்கும் போது, ஆதார், குடும்ப அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், மின்சார கட்டண ரசீது ஆகியவற்றை அசலாக எடுத்துச் செல்ல வேண்டும் எனவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.விண்ணப்பப்பதிவு முகாம்களை காலை 9.30 மணி முதல் ஒரு மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையும் நடத்த வேண்டும் எனவும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் முகாம்கள் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் அதனை எதிர்த்து விண்ணப்பதாரர் மேல் முறையீடு செய்ய விரும்பினால் 30 நாட்களுக்குள் இணைதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.