பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு..!

2019 ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் 8க்கும் மேற்பட்ட இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அண்ணா அடிக்காதீங்கண்ணா என்று பெண்கள் கதறிய வீடியோ நாட்டையே உலுக்கியது.
முதலில் இந்த வழக்கை பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விசாரித்தனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்த நிலையில் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டு திருநாவுக்கரசு (வயது 25), சபரிராஜன் (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27), மணிவண்ணன் (28), ஹெரன்பால் (29), பாபு (27), அருளானந்தம் (34) மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
நீதிமன்றத்தில் 1500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டன.
இந்தநிலையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பின் இன்று (மே 13) தீர்ப்பு வந்துள்ளது.அதில் திருநாவுக்கரசு (25), சபரிராஜன் (25), வசந்தகுமார் (27), சதீஷ் (28), மணிவண்ணன் (25), ஹேரேன் பால் (29), பாபு என்கிற பைக் பாபு (34), அருளானந்தம் (34), அருண்குமார் ஆகிய 9 பேர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டையே உலுக்கிய வழக்கில் 9 பேருக்கும் தரப்படும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் அரசு தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் குற்றவாளிகள் 9 பேரின் தண்டனை விவரங்களை நீதிபதி நந்தினி தேவி வாசித்தார். பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் என வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
சிபிஐ தரப்பு வழக்கறிஞர் சுரேந்திர மோகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 85 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தணனை விதிக்கப்பட்டுள்ளது. மேல்முறையீடுக்கு சென்றாலும் தண்டனையில் மாற்றம் இருக்காது” என்று கூறினார்.
பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பெண்களுக்கும் 10 முதல் 15 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும் வகையில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.