ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் ரூ.77 லட்சம் பறிமுதல்..!

சென்னையிலிருந்து அரியலூருக்கு ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (மார்ச் 1) அதிகாலை 1.30 மணிக்கு வந்தது. அதிலிருந்து பயணிகள் இறங்கி சென்ற நிலையில், தமிழகத்தில் போதைப் பொருட்கள் அதிக புழக்கத்தில் உள்ளதால், ரயில் மூலம் போதைப்பொருட்கள் கடத்தப்படுகிறதா என ரயில்வே போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, துணிக்கடைகளில் வழங்கப்படும் ஒரு பையுடன் இளைஞர் ஒருவர் சந்தேகப்படும்படி நின்றுள்ளார்.
அவரை அரியலூர் ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீஸார் அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் பெரம்பலூர் மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தை சேர்ந்த வேலுசாமி மகன் வினோத்குமார்(28) என்பதும், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் ரூ.500 தாள்கள் கொண்ட பணக்கட்டுகள் நிறைய இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அரியலூர் போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, ரயில்வே காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் ரூ.77,11,60 பணத்தை வினோத்குமார் கொண்டு வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து திருச்சி வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, இன்று (மார்ச் 1) காலை அரியலூர் ரயில்வே காவல்நிலையம் வந்த வருமான வரித்துறை டிஎஸ்பி சுவேதா தலைமையிலான போலீஸார், வினோத்குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வினோத்குமார் ஏதும் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து வினோத்குமாரை திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். எந்த ஒரு ஆவணமும் இல்லாத நிலையில் இந்த பணம் ஹவாலா பணமாக இருக்கலாம் என ரயில்வே போலீஸார் தெரிவித்தனர். மேலும், முழுமையான விசாரணைக்கு பிறகே தெரியவரும் என்றனர்.