அரசு அதிகாரிகளின் துணையோடு ரூ.700 கோடி கனிம ஊழல்; அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு..!
அறப்போர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு விபரம்:
நெல்லையில் அடம்பிடிபான் குளத்தில் உள்ள கல்குவாரியில் நடந்த விபத்து தான், கனிமவள கொள்ளையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. 2022ல் நடந்த இந்த விபத்திற்கு பிறகு புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் இயக்குநர், மாவட்டத்தில் உள்ள 54 குவாரிகளையும் ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அதன்படி, ஆய்வு செய்ததில் 53 குவாரிகளில் சட்டவிரோதமாக கனிமவளக் கொள்ளை நடந்தது அம்பலமானது. இதையடுத்து, கலெக்டர் விஷ்ணு அனைத்து குவாரிகளையும் மூடினார்.
கோபம் ஏன்?
இந்த குவாரிகள் மூடப்பட்டவுடன் 2 விஷயங்கள் நடக்கிறது. புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் இயக்குநர் நிர்மல் ராஜ் ஐ.ஏ.எஸ்., பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக ஜெயகாந்தன் ஐ.ஏ.எஸ்., பணியமர்த்தப்பட்டார். ஜூலை 2022ல் நெல்லையில் நடந்த தொழிற்பயிற்சி தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் சபாநாயகர் அப்பாவு, நெல்லை மாஜி எம்.பி., ஞானதிரவியம் ஆகியோர், குவாரிகளை மூட உத்தரவிட்ட கலெக்டர் விஷ்ணுவை கோர்த்து விட்டு, அவர் மீது கோபப்பட்டனர். இதன் பிறகு தான், அனைத்து குளறுபடிகளும் நடந்துள்ளன.
குவாரிகளில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், 2022, செப்டம்பரில் நெல்லை சப் கலெக்டர் சேரன்மகாதேவி, கனிமவள பாதுகாப்பு சட்டவிதிகளுக்குட்பட்டு, குவாரிகளின் உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அக்.,22ல் ஒவ்வொரு குவாரிகளும் எத்தனை கனிமவள கொள்ளையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதன் அடிப்படையில் அபராதங்களை விதித்தனர்.
சட்டவிரோத கனிமவள கொள்ளையில் ஈடுபட்ட கல்குவாரிகளுக்கு சப் கலெக்டர் பிறப்பித்த 24 ஆணைகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்றதில், லட்சக்கணக்கான கன மீட்டர் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. அதாவது, 10 லட்சம் கன மீட்டர் கனிமங்கள் வெட்டி எடுக்க அனுமதி வழங்கப்பட்ட இடங்களில், 3 மடங்கு அதிகமாக, அதாவது, ரூ.38 லட்சம் கன மீட்டர் வெட்டி எடுத்துள்ளனர்.
ரப் ஸ்டோனில் மட்டும் 50 லட்சம் கன மீட்டர் அதிகமாக வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. கிராவலில் ஐந்தரை லட்சம் கன மீட்டர் கொள்ளையடிக்கப்பட்டது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரிய வந்துள்ளது. ஆளும் கட்சியின் பிரதிநிதிகள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மற்றும் குவாரி உரிமையாளர்களின் கூட்டுசதியினால், இந்த அபராதம் அனைத்தும் உடைத்தெறியப்பட்டது. சப் கலெக்டர் போட்ட அபராத உத்தரவுக்கான மேல்முறையீட்டை கலெக்டரிடம் தான் கொடுக்க வேண்டும் என்பது விதி.
ஆனால், கலெக்டரிடம் மேல்முறையீடு செய்யாமல், புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் இயக்குநர் ஜெயகாந்தனிடம் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இவர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, அபராதங்களை குறைத்துள்ளார்.
அபராதம் குறைப்பு
உதாரணமாக, சட்டவிரோதமாக கனிமவள கொள்ளையில் ஈடுபட்ட கல்குவாரி உரிமையாளர் ராஜேந்திரன் என்பவருக்கு விதிக்கப்பட்ட ரூ.20 கோடி அபராதத் தொகையை வெறும் ரூ.73 லட்சமாக குறைத்துள்ளார். இந்த அபராதத் தொகையையும் மாதம் ரூ.5 லட்சம் தவணை முறையும் செலுத்தி கொள்ளவும் வாய்ப்பு கொடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல், இந்த குவாரிகளையும் மீண்டும் திறக்க அனுமதி கொடுத்துள்ளார். ஒட்டுமொத்தமாக அனைத்து குவாரிகளுக்கும் விதிக்கப்பட்ட ரூ.262 கோடி அபராதத்தொகையை ரூ.14 கோடியாக ஜெயகாந்தன் குறைத்து, அனைத்து குவாரிகளையும் திறக்கிறார். இந்த முறைகேடுக்கு தி.மு.க., பிரதிநிதிகள், நிர்வாகிகளுக்கும் தொடர்பு இருக்கிறது.
வெறும் 24 குவாரிகளில் மட்டும் ரூ.262 கோடி அபராதம் விதிக்கும் அளவுக்கு கனிமவள கொள்ளை அரங்கேறிய நிலையில், மொத்தம் உள்ள 53 குவாரிகளில் சேர்த்து பார்த்தால், ரூ.600 கோடியை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டதால், அரசியல்வாதிகள் தொடர்ந்து சட்டவிரோத குவாரிகளை நடத்தி கனிமவள கொள்ளை நடக்கிறது.
நெல்லையில் 53 குவாரிகளில் சேர்த்து ரூ.600 கோடியும், திருப்பூரில் ஒரே குவாரியில் மட்டும் ரூ.100 கோடி அளவுக்கு கனிமவள கொள்ளை நடந்துள்ளது. இவ்வாறு அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த முறைகேடுகள் தொடர்பாக, அமைச்சர் துரைமுருகன், சபாநாயகர் அப்பாவு, மாஜி தி.மு.க., எம்.பி., ஞானதிரவியம், ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஜெயகாந்தன் ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டும், என்றும் அறப்போர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.