ரூ. 6 கோடி கேட்டு சிறுவன் கடத்தல்! சில மணி நேரத்தில் மீட்ட காவல்துறை!

திருச்சியில் தொழிலதிபர் ஒருவரின் 12 வயது மகனை 6 கோடி ரூபாய் கேட்டு மர்ம நபர்கள் காரில் கடத்தியுள்ளனர். ஒரு சில மணி நேரத்திலேயே, அந்த சிறுவனை போலீசார் அதிரடியாக மீட்டனர்.
திருச்சி கன்டோன்மென்ட்டைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் கண்ணப்பனின் மகன் முத்தையா (12). நேற்றுமுன்தினம் மாலை தனது வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தான். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததை கண்டு அதிர்ச்சி அடைந்து அவனது பெற்றோர்கள் வீட்டின் வெளியே வந்து தேடினர்.
அப்போது கண்ணப்பனுக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர், உங்களது மகனை நாங்கள் தான் கடத்தியுள்ளோம். ரூ.6 கோடி கொடுத்தால் மட்டுமே உங்கள் மகனை விடுவோம் என கூறிவிட்டு லைனை துண்டித்து விட்டார்.இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த கண்ணப்பன் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசாரின் அறிவுரைப்படி மர்ம நபர்கள் கூறிய இடத்திற்கு பணத்துடன் கண்ணப்பன் சென்றார்.
மர்ம நபர்கள் பேசிய போன்கால் உறையூர் ராமலிங்க நகர் 2வது குறுக்கு தெரு என சிக்னலில் தெரியவந்தது. இதனையடுத்து அந்த இடத்திற்கு போலீசார் விரைந்து சென்ற போது, சிறுவனை காரிலேயே விட்டுவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இதையடுத்து கடத்தப்பட்ட சிறுவனை போலீசார் மீட்டனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் கைப்பற்றினர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுவனை அதிரடியாக மீட்ட காவல்துறையினருக்கு திருச்சி பொது மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.