போலீசாரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.5 லட்சம்.. மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு..!

போலீசாரால் பாதிக்கப்பட்ட இருளர் இன மக்கள் 15 பேருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க டிஜிபிக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே தி.கே.மண்டபம் பகுதியில் இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். மணல் சலிப்பது, ஆடுகள் மேய்ப்பது, செங்கல் சூளைகளில் வேலை செய்வது போன்ற பணிகளை செய்து வருகின்றனர்.
கடந்த நவம்பர் 22-ம் தேதி இரவு இந்த பகுதிக்கு சென்ற போலீசார் இருளர் இனத்தைச் சேர்ந்த முருகன், குமார், காசி, வெள்ளிக்கண்ணு, மற்றொரு குமார், ஏழுமலை ஆகிய 6 பேரை பிடித்துச் சென்றுள்ளனர்.
அவர்களை திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் அடைத்து வைத்து சித்தரவதை செய்ததாக கூறப்படுகிறது. பெண்கள் உட்பட மேலும் 9 பேரை பிடித்து அருகே உள்ள தைலமர தோப்புக்கு கொண்டு சென்றுள்ளனர். அதில் 4 பெண்களிடம் பாலியல் வன்முறையில் போலீசார் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு இயக்கங்கள், அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், பத்திரிகைகளில் வந்த செய்திகளின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்தது. நேற்று முன்தினம் இந்த வழக்கின் விசாரணை முடிவை மாநில மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டது.
அதில் கூறியிருப்பதாவது: ‘இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 15 பேருக்கும் தலா ரூ.5 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள போலீசார் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்.
அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றச்சாட்டுக்குள்ளான போலீசார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 3 மாதத்தில் தமிழக டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.