1. Home
  2. தமிழ்நாடு

ரூ.5 கோடி செலவில் அம்மா உணவகங்களை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு..!

1

ஏழை மக்களுக்கு, மலிவு விலையில் தரமான உணவு வழங்க, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் 2013ல் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டது. தற்போது சென்னை மாநகராட்சியில் சுமார் 399 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு, இட்லி ஒரு ரூபாய், பொங்கல், சாம்பார், லெமன், கருவேப்பிலை சாதம் தலா 5 ரூபாய், தயிர் சாதம் 3 ரூபாய், 2 சப்பாத்தி 3 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவற்றினால் ஆண்டுக்கு 20 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தாலும், குறைந்த விலைக்கு உணவுகளை வழங்குவதால் ஆண்டுக்கு 140 கோடி ரூபாய் சென்னை மாநகராட்சிக்கு செலவாகிறது.

இந்நிலையில் அம்மா உணவகங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் மற்றும் உணவு வகைகளை அதிகரிக்க வேண்டும் என மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி கூட்டங்களில் மேயர் பிரியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் சுமார் ரூ.5 கோடி செலவில் கட்டமைப்பை மேம்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அனைத்து அம்மா உணவகங்களின் கட்டடங்களை சீரமைத்து, வண்ணம் பூசி புதுப்பொலிவுடன் மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், உணவகங்களின் சமையலறையில் பிரிஜ், கிரைண்டர், மிக்ஸி உள்ளிட்ட பழுதடைந்த இயந்திரங்கள், சமையலறை பொருட்களை மாற்றவும், மண்டல அதிகாரிகளுக்கு, மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

வரும் காலங்களில், அம்மா உணவகம் தொடர்பாக புகார் வந்து, மாநகராட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், அம்மா உணவகங்களின் பயனாளிகளின் வருகையை அதிகரிக்க, ருசியான புதிய உணவு வகைகளை அறிமுகப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடக்கிறது என்றும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like